நெஞ்சை உருக்கும் நிகழ்வு
எங்களால் வளர்க்க முடியாது: ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண் குழந்தைகளை ஆஸ்பத்திரிலேயே விட்டு சென்ற பெற்றோர்
Photo : Dinamani
செல்வத்தில் சிறந்தது மழலை செல்வம் என்பார்கள். குழந்தைப்பேறு என்பது கிடைப்பதற்கு அரியது. திருமணம் செய்து குழந்தை பாக்கியம் இல்லாமல் பலர் கோவில்களில் சென்று வழிபடுவது, மருத்துவ–மனைகளை நாடி செல்வது என பல முயற்சிகளை எடுக்கிறார்கள்.
ஆனால் குழந்தை பிறந்ததும் அதை கவனித்துக்கொள்ள விருப்பமின்றி சாலை ஓரமோ, குப்பை தொட்டியிலோ வீசி செல்லும் கல்நெஞ்சம் படைத்தவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஒரு குழந்தை பிறந்தாலே கொண்டாடும் இந்த உலகில் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளை பெற்ற தாயே ஆஸ்பத்திரியில் பரிதவிக்க விட்டு சென்ற சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.
3 பெண் குழந்தைகள்
சேலத்தை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்திற்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கடந்த மாதம் 20-ந் தேதி பிரசவம் நடந்ததில், 3 பெண் குழந்தைகள் பிறந்தது. இந்த குழந்தைகளுக்கு எடை குறைவாக இருந்ததால், குழந்தைகள் நல மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் குழந்தைகளை பராமரிக்க இயலாத சூழ்நிலை உள்ளதால், நீங்களே பராமரித்துக் கொள்ளுங்கள், எங்களுக்கு இக் குழந்தைகள் வேண்டாம் என மருத்துவர்களிடம் பெற்றோர் தெரிவித்து உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், பெற்றோரிடம் பேசியுள்ளனர். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக குழந்தைகளை தங்களால் வளர்க்க முடியாது என பெற்றோர் தெளிவாக தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 3 குழந்தைகளையும் கடந்த 15 நாட்களாக பராமரித்து வந்தனர். 3 குழந்தைகளும் ஓரளவு எடை கூடிய பிறகு, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண் குழந்தைகளும் நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் முன்னிலையில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி, குழந்தைகள் நல மருத்துவர்கள், அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், பெற்றோரின் குடும்ப சூழ்நிலை காரணமாக 3 பெண் குழந்தைகளையும் பராமரிக்க முடியாது என விட்டுச் சென்றனர். இதனால் குழந்தைகள் 15 நாட்கள் அரசு மருத்துவமனையில் வைத்து பராமரிக்கப்பட்டது.
பின்னர் பெற்றோரிடம் பேசியும், குழந்தைகளை எடுத்துச் செல்ல அவர்கள் விருப்பம் தெரிவிக்காததால், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்கள் 60 நாட்களுக்கு குழந்தைகளை பராமரித்து வருவார்கள். அந்த நேரத்தில், பெற்றோர் மனது மாறி திரும்பி வந்தால் குழந்தைகள் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும். அப்போதும், பெற்றோர் வராத பட்சத்தில்3 குழந்தைகளையும் தத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
பொதுவாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 30-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கின்றன. சேலம் உள்பட பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் பிரசவத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
பெற்றோர் விட்டு சென்ற 3 பெண் குழந்தைகளையும், சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் முன்னிலையில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரியிடம் அரசு ஆஸ்பத்திரி டீன் வள்ளி சத்தியமூர்த்தி ஒப்படைத்தார்.
ஆதரவின்றி தவிக்கவிடப்படும் குழந்தைகள் அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 1992-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் "தொட்டில் குழந்தை திட்டம்" சேலம் மாவட்டத்தில் தான் முதன்முதலாக தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment