வள்ளலார் காட்டிய வாழ்வியல் நெறிகள்
வள்ளலார் காட்டிய வாழ்வியல் நெறிகள்
வள்ளலார் காட்டிய வாழ்வியல் நெறிகள்
” அருட்பெருஞ்சோதி , தனிப்பெருங்கருணை , அருட்பெருஞ்சோதி ,
தனிப்பெருங்கருணை “ – திருவருட்பிரகாச வள்ளலார் என போற்றப்படும்
இராமலிங்க அடிகளார் அவர்கள் அவதரித்த தினம் ( 5 அக்டோபர் 1823 ) இன்று .
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த மருதூரில் இராமையாப்பிள்ளை ,
சின்னம்மையாருக்கு ஐந்தாவது மகனாக பிறந்தார் பெருமகனார் .
சிறு வயதிலேயே தந்தையை இழந்த இராமலிங்கர் தாயார் மற்றும் சகோதர ,
சகோதரிகளுடன் பொன்னேரி பகுதியிலும் பிறகு சென்னை ஏழுகிணறு பகுயிலும்
வசித்து வந்தார். இவரது சகோதரர் இவரை கல்வியில் முன்னேற வைக்க
விரும்பினார் . ஆனால் இராமலிங்கனாரோ கல்வியில் அவ்வளவாக ஈடுபாடு
காட்டவில்லை , ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு காட்டினார் .
அதனால் இவரை நல்வழிப்படுத்த காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி
முதலியாரிடம் கல்வி கற்க அனுப்பி வைக்கப்பட்டார் , ஆனால் அங்கும்
கல்வியில் ஈடுபாடு காட்டவில்லை , ஒருநாள் கந்தகோட்டம் முருகன் கோவிலுக்கு
சென்ற இராமலிங்கனார் மனமுருகி கந்தனை வேண்டி பாடல் ஒன்றை பாடியுள்ளார் .
இதனை கேட்ட பொதுமக்களும் , அவரது ஆசிரியருமான சபாபதி அவர்களும் மெய்
மறந்து போயினர் . இராமலிங்கனார் தெய்வப்பிறவி என்பதை அனைவரும் உணர்ந்தனர்
. அன்றிலிருந்து தமது ஆன்மிக பாதையில் பயணிக்கத் தொடங்கினார் வள்ளல்
பெருமகனார் . வள்ளல் பெருமகனார் , முருகதாச சுவாமிகள் , பாம்பன்
சுவாமிகள் ஆகிய மூவரும் கந்த கோட்டத்தை வழிபட்டு பாமாலைகள்
பாடியருளியுள்ளனர் .
வள்ளலார் தமது பனிரெண்டாம் அகவை முதல் ஞான வாழ்க்கையை தொடங்கினார்கள் .
சிறு வயது முதலே பல நற்குணங்களை பெற்று திகழ்ந்தார் . 1850 ல் இவருடைய
இருபத்தேழாம் அகவையிலே திருமணம் நடைபெற்றதாக வரலாற்று குறிப்புகள்
தெரிவிக்கின்றன. சிறுவயது திருமணம் நடைமுறையில் இருந்த அக்காலகட்டத்தில்
சரியான வயதில் திருமணம் புரிந்து தனது திருமணத்திலேயே புரட்சி
செய்துள்ளார் .
வள்ளலார் பன்முக ஆற்றல்களை பெற்றுத் திகழ்ந்தார் . அவர் சிறந்த
சொற்பொழிவாளர் , உரையாசிரியர் , இதழாசிரியர் , பதிப்பாளர் , இறையன்பர் ,
சித்த மருத்துவர் , நூலாசிரியர் , தமிழ் மொழி ஆய்வாளர் , பசிப்பிணி
போக்கிய அருளாளர் , சமூக சீர்த்திருத்தவாதி என பன்முக ஆற்றல்களை பெற்று
தொண்டாற்றினார் என்றால் மிகையல்ல .
எல்லாவற்றையும் விட மூட பழக்க வழக்கங்கள் மலிந்து கிடந்த
அக்காலகட்டத்தில் தலைசிறந்த சமூக சீர்த்திருத்தவாதியாக திகழ்ந்தார் .
எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர்
தோற்றுவித்த மார்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்கம் என பெயரிட்டார்.
மொழிச் சங்கம் நமக்கு அறிந்ததே. ஆனால் ஆன்மிக சங்கம் நமக்கு புதுமையானது
. தமிழகத்தில் முதன்முதலில் ஆன்மிக சங்கம் தோற்றுவித்தது வள்ளலார்
பெருமகனார் ஆவார் .
வள்ளலாருக்கு முன்பிருந்த ஞானிகள் ,சமய குரவர்கள் , நாயன்மார்கள் ,
ஆழ்வார்கள் , சித்தர்கள் ஆகியோர் பலர் மடங்களை அமைத்தே தொண்டாற்றினர் ,
வள்ளல் பெருமகனாரோ சங்கம் அமைத்து சமூகத் தொண்டாற்றினார் . ஏனெனில்
சங்கம் அனைவருக்கும் பொதுவானது. எல்லோரையும் அரவணைத்து கொள்ளவல்லது .
வள்ளலார் தம் வாழ்நாளில் பெரும் அதிசயங்களையும் , அற்புதங்களையும்
நிகழ்த்தி உள்ளார் . ஒருமுறை இராமசாமி என்பவரது நாவில் ஏற்பட்ட புற்று
நோயை குணப்படுத்தி அதிசயம் நிகழ்த்தினார் . பக்தர்களின் நோயினை
குணப்படுத்தி அதிசயம் நிகழ்த்துவார். அப்பாசாமி என்பவரது
வாழைத்தோட்டத்தில் வள்ளல் பெருமகனாரை பாம்பு ஒன்று தீணடியது , ஆனால்
அப்பாம்பின் விடம் அடிகளாரை ஏதும் செய்யவில்லை , தீண்டிய பாம்போ மாண்டு
போனது . கருங்குழியில் அன்பர் ஒருவரது வீட்டில் அடிகளார் தங்கி இருந்த
போது அப்போது எண்ணெய் என கருதி அவர் விளக்கினில் தண்ணீரை இட்டபோதும்
விளக்கு எரிந்த அதிசயம் நிகழ்ந்தது .
சாதிய பாகுபாடுகளை சாடினார் . இதனால் பழமைவாதிகளின் எதிர்ப்பினைப்
பெற்றார் ஆயினும் இவர்தம் அறவழியே பயணித்தார் . தொடர்ந்து மக்கள்
தொண்டாற்றினார். சமூக சீர்த்திருத்தவாதிகளுக்கெல்லாம் முன்னோடியாக
திகழ்ந்தார் . அறிவுநெறி தழைத்தோங்க வடலூரில் சத்திய ஞான சபையை
நிறுவினார் . இவரது கோட்பாடுகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு
பின்பற்ற வேண்டிய முற்போக்கு வாழ்வியல் முறையாகும் .
இறைவன் ஒன்றே என்றார் , அவர் அருட்பெருஞ்சோதி என்றார். அவ்விறைவன்
அனைவருக்கும் பொது என்றார் . தமிழகத்தின் முன்னோடி சாதி சமய மறுப்பாளர்
வள்ளல் பெருமகனார் ஆவார் . 1867 ம் ஆண்டில் அல்லலுறும் மக்களின்
பசிப்பிணி போக்க சத்திய தரும சாலையை நிறுவினார். அன்றிலிருந்து இன்று வரை
அரசின் உதவியோடும் , நன்கொடையாளர்களின் பங்களிப்போடும் அணையா அடுப்பு
தொடர்ந்து பசியாற்றி வருகிறது .
” வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வடினேன் “ என்பதன் மூலம் பிற உயிர்களை தன்
உயிர் போல பாவித்து காக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளார் .
புலால் உண்ணுதலையும் , பலி இடுவதையும் சாடியுள்ளார் . ஆனால் பசிப்பிணி
போக்குவதே அறமாக வலியுறுத்தியுள்ளார் .
இவர்தம் தமிழுக்காற்றிய தொண்டும் போற்றுதலுக்குரியது . சின்மய தீபிகை ,
ஒழிவிலொடுக்கம் , தொண்டை மண்டல சதகம் முதலிய நூல்களை பதிப்பித்துள்ளார் .
இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு திருவருட்பா என அழைக்கப்படுகிறது
. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப் பட்டுள்ளது . ஜீவகாருண்ய ஒழுக்கம்
முதலான உரைநடைகளையும் இயற்றியுள்ளார் .
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த முற்போக்குவாதியாகவும் , சமூக
சீர்த்திருத்தவாதியாகவும் , ஆன்மிகவாதியாகவும் இடதுசாரி சிந்தனைவாதிகளின்
முன்னோடியாக திகழ்ந்த தமிழர் வள்ளல் பெருமகனார்.
அவரது கோட்பாடுகள் எக்காலத்தும் , எல்லா சமூகத்திற்கும் பொருந்தக்கூடியவை
. சமரச சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றுவதன் வாயிலாக சமத்துவ சமுதாயத்தை
கட்டமைக்க இயலும் . நம் தமிழ் மண்ணில் பிறந்து முற்போக்கு சிந்தனைகளை
விதைத்து விட்ட வள்ளலாரின் அறவழியை நாமும் பின்பற்றுவோமாக , எல்லா
உயிர்களையும் தன் உயிர் போல கருதி கருணை கொள்வோமாக . வள்ளலார் பசிப்பிணி
ஆற்றும் உயரிய நோக்கத்தை நாமும் வாழ்வில் கடைபிடிப்போம் .
அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் அருள் பெறுவோம் .
அருட்பெருஞ்சோதி , தனிப்பெருங்கருணை ..
ஆக்கம்
R.R
Comments
Post a Comment