கலைஞர் - கவலைக்கிடம்
திமுக தலைவர் கலைஞர் - கவலைகிடம்
"தினமலர் செய்தி"
"தினமலர் செய்தி"
கடந்த, 10 நாட்களாக, தீவிர சிகிச்சை பெற்று வரும், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை, நேற்று கவலைக்கிடமானது. அதை உறுதிப்படுத்தும் விதமாக, நேற்றிரவு, காவிரி மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது. அதில், '24 மணி நேரமும், அவரது உடல்நிலை கண்காணிக்கப்படுவதாகவும், அதன்பின்னரே, கருணாநிதியின் உடல்நிலை குறித்து தெரிய வரும்' என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, ஜூலை 18ல், திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை, ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனையில், அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தொண்டையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பொருத்தப்பட்டிருந்த, 'டிரக்கியோஸ்டமி' என்ற, செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டது.
மஞ்சள் காமாலை :
அக்கருவி மாற்றப்பட்டதால், கருணாநிதிக்கு தொற்று உருவானது. இதனால், அவருக்கு காய்ச்சலும் ஏற்பட்டது. சளித் தொல்லை காரணமாகவும், அவர் அவதிப்பட்டார். சென்னை, கோபாலபுரம் வீட்டில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஜூலை 28 நள்ளிரவில், மூச்சு திணறல், ரத்த அழுத்தம் குறைவு காரணமாக, உடல் நிலை மோசமானது.
அதையடுத்து, அதிகாலை, 1:30 மணிக்கு, காவேரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு, மூச்சு திணறல் குறைந்து, ரத்த அழுத்தமும் சீரானது. தொடர்ந்து அவரை, டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து, சிகிச்சை அளித்தனர்.
இதற்கிடையில், கருணாநிதியின் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது. கருணாநிதிக்கு, பிரபல கல்லீரல் நோய் நிபுணர், முகம்மது ரேலா, சிகிச்சை அளித்தார். கல்லீரலில் புற்றுநோய் இல்லை என்றும், ஒவ்வாமை ஏற்பட்டு உள்ளது என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. கல்லீரல் நோய் தொடர்பான சிகிச்சை அளித்து வந்தபோது, திடீரென மஞ்சள் காமாலை நோய், கருணாநிதியை தாக்கியது. இதனால், நேற்று முன்தினம் இரவில், அவரது உடல் நிலை கவலைக்கிடமானது.
நேற்று மாலை, 6:30 மணிக்கு, மருத்துவமனை நிர்வாகம் சார்பில், அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், 'தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில், பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 'வயது முதிர்வு காரணமாக, முக்கிய உறுப்புகளை தொடர்ந்து செயல்பட வைப்பது, பெரும் சவாலாக உள்ளது. மருத்துவ சிகிச்சை முன்னேற்றங்கள் குறித்து, தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. 'அடுத்த, 24 மணி நேரத்தில், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு, அவரது உடல்நிலை எப்படி ஒத்துழைக்கிறது என்பதை வைத்தே, அடுத்த கட்ட சிகிச்சை இருக்கும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
காவேரி மருத்துவமனையில், 10 நாட்களாக, கருணாநிதி சிகிச்சையில் இருக்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், காங்கிரஸ் தலைவர்
ராகுல் மற்றும் தேசிய, மாநில கட்சிகளின் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், காவேரி மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரித்தனர்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ராகுல் ஆகியோர் மட்டுமே, கருணாநிதியை நேரில் பார்த்த புகைப்படம் வெளியிடப்பட்டது. ஜனாதிபதி பார்த்த புகைப்படம், வெளியிடப்படவில்லை. கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், அந்த புகைப்படத்தை வெளியிடவில்லை.
இது குறித்து, மருத்துவமனை வட்டாரம் கூறியதாவது: மஞ்சள் காமாலைக்கு உரிய மருந்து செலுத்தப்பட்ட போதிலும், வயது முதிர்வு காரணமாக, கருணாநிதியின் உடல் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரது உடலுறுப்புகள், ஒவ்வொன்றாக பாதிக்கப்பட்டு வருகின்றன. கருணாநிதி உடல்நிலையில், நேற்று முன்தினம் இரவில், ஏற்றமும், இறக்கமும் காணப்பட்டுள்ளது. குறிப்பாக, கல்லீரல் செயல்பாட்டில், பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
குடும்பத்தினர் வருகை :
இந்நிலையில், நேற்று காலையில், கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களான, ராஜாத்தி, அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, செல்வி, தமிழரசு உள்ளிட்டோர், மருத்துவமனைக்கு விரைந்தனர். முதன்மை செயலர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, ராஜா உள்ளிட்டோர் வந்தனர்.ஆனால், குடும்ப உறுப்பினர்களை தவிர, வேறு யாரையும், கருணாநிதியை பார்க்க அனுமதிக்கவில்லை. ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் சோகமாக காணப்பட்டனர்.
மதியம், 2:00 மணி அளவில், கோபாலபுரம் வீட்டிலிருந்து, கருணாநிதியின் காரில், தயாளுவை அழைத்து வந்தனர். 10 நாட்களாக, கருணாநிதி சிகிச்சை பெற்று வந்தாலும், மருத்துவமனைக்கு, தயாளு வரவில்லை. முதன் முறையாக, நேற்று காவேரி மருத்துவமனைக்கு, அவர் வந்தார்.சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை பார்த்ததும், தயாளு கண் கலங்கி அழுதுள்ளார். குடும்ப உறுப்பினர்கள், தயாளுவை ஆசுவாசப்படுத்தி, உடனடியாக, கோபாலபுரம் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது.
முதல் தகவல்! கருணாநிதியின் உடல் நலம் குறித்து, நேற்று காலை, காவேரி மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்து விட்டு, வெளியே வந்த, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது: கருணாநிதியின் உடல்நிலையில், பின்னடைவு ஏற்பட்டு, தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். நல்லபடியாக, அவர் மீண்டு வர வேண்டும் என, இறைவனை பிரார்த்திப்போம். அவருக்கு, என்னென்ன பிரச்னைகள் உள்ளன என்பது குறித்து, எனக்கு தெரியாது. டாக்டர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்ததில், அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு, சிகிச்சை அளித்து வருவது தெரிய வந்தது. அதைத் தான் இப்போது, என்னால் தெரிவிக்க முடியும். அவர் உடல் நலம் பெற வேண்டும் என, நாம் அனைவரும் பிரார்த்திப்போம். இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.
நன்றி : தினமலர்
Comments
Post a Comment