சே குவேரா - பிறந்த தினம் இன்று
புரட்சியாளர் சே குவேரா பிறந்த தினம் ஜூன் 14 , 1928 .
புரட்சியாளர் சே குவேரா பிறந்த தினம் ஜூன் 14 , 1928 .
சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா ( Ernesto Guevara de la Serna ) ( ஜூன் 14 , 1928 – அக்டோபர் 9 , 1967 )
அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் ( கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.
பெயர்
சே என்பது வியப்புச்சொல் ஆகும். இச்சொல்லை அர்சென்டீனர்கள், குவேரனி இந்தியர்களிடமிருந்து பழகினர் என்று கருதப்படுகிறது. அவ்விந்தியர், எனது என்ற பொருளில் பயன்படுத்துவர் என்று மானுடவியல் அறிஞர் கூறுவர். ஆனால்,
தென்னமரிக்கப் பாம்பாஸ் புல்வெளியினருக்கு வியப்பு, மகிழ்ச்சி, வருத்தம், நாணயம், அட்சேபம், அங்கீகாரம் போன்ற பல மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் சொல்லாக அமைகிறது. இடத்திற்கு ஏற்பவும், ஒலிப்புக்கு ஏற்றவாறும் அச்சொல் பயனாகிறது. இச்சொல்லின் மீதுள்ள பற்றால், கியூபா புரட்சியாளர்கள், 'சே' என்று செல்லமாக அழைத்தனர். அவரது பெற்றோர், அவரை 'டேட்டி' என்று செல்லமாக அழைப்பர்.
இளமைக்காலம்
சே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் அர்கெந்தீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். இசுபானிய, பாஸ்க்கு, ஐரிசிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.
வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த "ரக்பி" விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை "பூசெர்" என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு "பன்றி" என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.
தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12 ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வளர்ந்த பின்பும், பின்னர் வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நெரூடா, கீட்ஸ், மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்கள் மீது இவருக்குச் சிறப்பு ஆர்வம் இருந்தது.
குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம். இவற்றுள், மார்க்ஸ் ,
போல்க்னர் , கைடே, சல்காரி , வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேரு, காப்கா , காமுஸ்,
லெனின் போன்றவர்களது நூல்களையும்,
பிரான்ஸ் , ஏங்கெல்ஸ் , வெல்ஸ் , புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார்.
அவரது வயது அதிகரித்த போது, அவருக்கு இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான குயிரோகா ,
அலெக்ரியா , இக்காசா , டாரியோ ,
ஆஸ்டூரியாஸ் போன்றோருடைய ஆக்கங்களின் பால் ஈடுபாடு ஏற்பட்டது. செல்வாக்கு மிக்க தனி நபர்களின் கருத்துருக்கள், வரைவிலக்கணங்கள், மெய்யியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதிவந்த குறிப்புப் புத்தகத்தில் இவர்களுடைய கருத்துக்களையும் அவர் குறித்து வந்தார். இவற்றுள், புத்தர் ,
அரிஸ்ட்டாட்டில் என்போர் பற்றிய ஆய்வுக் குறிப்புக்கள், பேட்ரண்ட் ரஸ்ஸலின் அன்பு, தேசபக்தி என்பன குறித்த ஆய்வு, ஜாக் லண்டனின் சமூகம் பற்றிய கருத்துக்கள்,
நீட்சேயின் இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பனவும் அடங்கியிருந்தன. சிக்மண்ட் பிராய்டின் ஆக்கங்களாலும் கவரப்பட்ட சே குவேரா, அவரைப் பல வேளைகளில் மேற்கோள் காட்டியுள்ளார்.
கல்வி
1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி "மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்" (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர், 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் [7] விருதுகளையும் பெற்றது.
பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார். பயணத்தின் முடிவில், இவர், இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற
ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. ஆர்ஜெண்டீனாவுக்குத் திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமாப் பட்டம் பெற்றார்.
பயணங்கள்
சே குவேரா இலங்கைக்கு சென்றபோது நாட்டிய மகோகனி மரம். இடம்: யகலகெல இறப்பர் தோட்டம், மெரககெகனை, கொரணை. ஆகத்து 8, 1959 [8]
1953 ஜூலையில் மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலீவியா ,
பெரு , ஈக்குவடோர் , பனாமா ,
கொஸ்தாரிக்கா , நிக்கராகுவா ,
ஹொண்டூராஸ் , எல் சல்வடோர் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர்
ஜாக்கோபோ ஆர்பென்ஸ் குஸ்மான் என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட (latifundia) முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார். உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார்.
குவாத்தாமாலா நகரில், சே குவேராவுக்கு ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு (American Popular Revolutionary Alliance) என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களுமான தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன. இக் காலத்திலேயே "சே" என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. "சே" என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்.
கியூபாவில் புரட்சி
சில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. அதன் பின்னர் கியூபாவின் மத்திய வங்கியின் தலைவராக 14 ஆண்டுகள் பணியாற்றினார்.அக்காலகட்டத்தில்
கரந்தடிப் போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். 1964 டிசம்பர் 11ம் தேதியன்று கியூபாவின் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் அவையின் 19 வது பொது அமர்வில் உரையாற்றினார். [9] பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும்
பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.
பொலிவியாவில் சே குவேரா
சே 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார். பல காரணங்களால் பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று நம்பப்படுகிறது. அமெரிக்கா பொலிவியாவைவிட கரிப்பியன் பேசின் நாடுகளே தங்கள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என்று நம்பியதும், அதனால் அமெரிக்காவின் பார்வை பொலிவியா மீது அவ்வளவு தீர்க்கமாக விழவில்லை என்பதும் ஒரு காரணம் . இரண்டாவதாக பொலிவியாவின் ஏழ்மையும் அங்கு நிலவிய சமூக மற்றும் பொருளாதார நிலைகளும் எந்நேரமும் அங்கு புரட்சி வெடிக்க சாதகமாக இருந்தது . மூன்றாவதாக பொலிவியா ஐந்து பிற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொண்டிருந்தது . பொலிவியாவில் கொரில்லாப் போராட்டம் வெற்றி பெறுமேயானால் அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவச் செய்துவிடலாம் என்று குவேரா நினைத்தது. (ஆனால் ஃபிடெல் காஸ்ட்ரோ தன்னை வஞ்சித்து விட்டதாக சே குவேரா மிகவும் வருந்தியதாக 1998ம் ஆண்டு ஓய்வு பெற்ற பொலிவிய ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
சேவின் உடல். சி.ஐ.ஏ உளவாளி ஒருவரால் எடுக்கப்பட்டது
பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும்
அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் கேரி ப்ராடோ சால்மோன் என்பவரின் தலைமையில் [9] ஒக்டோபர் 9 , 1967 இல் சே குவேரா கொல்லப்பட்டார். சாட்சிகள் மற்றும் கொலையில் பங்குபற்றியவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது. கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்றார். தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் "ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு" என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி பட்டிருந்தது)
அவரது மரணத்தின்பின், சே குவேரா உலகிலுள்ள சோசலிச புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராக கொண்டாடப்படுகிறார். நினோ டி குஸ்மான் என்ற அந்த அதிகாரி குவேராவை சுட்டுக் கொல்வதற்கு முன்பு அவனிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது சே அவனுடைய மனக்குமுறலை வெளியிட்டதாகவும் கூறினார். தான் பெரு நாட்டில் புரட்சி செய்ய முடிவெடுத்ததாகவும் ஆனால் காஸ்ட்ரோ தான் தன்னை வற்புறுத்தி பொலிவிய நாட்டில் கலகம் விளைவிக்கக் கூறியதாகவும் சே குவேரா கூறியதாக தகவல் வெளியாயிற்று. மேலும் சே குவேரா பெரு நாட்டின் விவசாயிகள் தன்னுடைய புரட்சிக்கு ஆதரவு கொடுத்திருப்பார்கள் என்றும் பொலிவிய நாட்டில் விவசாய மறுமலர்ச்சி திட்டத்தால் மக்கள் அவ்வளவு அதிருப்தியடையாததால் அவர்களின் ஆதரவு எதிர்ப்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறியதாக அந்த அதிகாரி கூறியிருந்தார்.)
வாழ்க்கை நிகழ்வுகள்
"விடுதலை சே" என்ற வாசகத்துடன் முச்சக்கர வண்டி, கொழும்பு
1928 ஜூன் 14 - பிறப்பு
1945 – மருத்துவப்படிப்பை மேற்கொள்ளுதல்
1950 – உந்துருளியில் 3000 மைல் தூரம்
அர்ஜென்டீனா முழுவதும் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பிக்கிறார்
1952 - தனது நண்பன் அல்பெர்த்தோ கிரனடாவுடன் பெரு , கொலம்பியா ,
வெனிசூலா , ஆகிய நாடுகளுக்கு பயணம் செல்லுகிறார். பெருவில்
தொழுநோயாளர் குடியிருப்பில் பணிபுரிதல்
1953 ஜூன் 12 - மருத்துவராக பட்டம் பெறுதல்.
ஜூலை 6 – லத்தீன் அமெரிக்கா பயணத்தை மேற்கொள்ளுதல்
1955 ஜூலை - ஃபிடல் காஸ்ட்ரோவை சந்தித்தல். கரந்தடிப் போராளிகளுக்கான பயிற்சியை மேற்கொண்டிருக்கும் குழுவினருக்கு மருத்துவராக அவர்களுடன் இணைந்து பின் போராளியாகிறார். இங்குதான் அவர முதன் முதலில் சே என அழைக்க ஆரம்பித்தார்கள்.
ஆகஸ்ட் 18 - குவாதமாலாவில் தாம் சந்தித்த பெரு நாட்டைச்சேர்ந்த தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தவரான ஹிடா காடியாவை மணந்துகொள்கிறார்.
1956 பெப்ரவரி 15 - சே வுக்கும் ஹில்டாவுக்கும் ஹில்டா பிட்ரீஸ் குவேரா பிறக்கிறாள்.
[[ஜூன் 24 சே மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் 26 பேர் கைதுசெய்யப்படுகிறார்கள். சே 57 நாட்கள் சிறையில் இருக்கிறார்.
1957 மே 27, 28 - யுவேராப் போர். சூனூ 5 - இராணுவத்தினுடைய நான்காவது அணித் தளபதியாகிறார்.
1958 ஜூலை - புரட்சிப்படை பாடிஸ்டாவின் படைகளை தோற்கடித்து முன்னேறுகிறது.
டிசம்பர் 28 - லாஸ் வியாசின் தலைநகரான சாண்டா கிளாராவின்மீது சே போர் தொடுக்கிறர்.
1958 ஆகத்து 21 - சிரோ ரிடன்டோ எட்டாவது அணியின் தலைவராகப் பொறுப்பேற்று லாஸ் வில்லாசு மாநிலத்திற்கு போக உத்தரவு.
அக்டோபர் 10 நாளன்று, எஸ்கம்ப்ரே மலைகளை, அவரின் படைப்பிரிவு அடைகிறது.
திசம்பர் சான்டா கிளாரா முற்றுகை நடைபெறுகிறது. அம்மாதம் 28-31 நாள்வரை தலைமை ஏற்றுப் போரை நடத்துகிறார்.
1959
ஜனவரி 1 - சாண்டா கிளாரா, சேவின் வசமாகிறது. பாடிஸ்டா ஓடித்தப்பிவிடுகிறார். சே ஹவானாவை நோக்கி முன்னேறுகிறார்.
ஜனவரி 2 - காஸ்ட்ரோ அறிவித்த பொது வேலை நிறுத்தத்தினால் நாடே ஸ்தம்பிக்கிறது.
ஜனவரி 3 - சே ஹவானாவை அடைந்து கபானா கோட்டையை கைப்பற்றுகிறார்
ஜனவரி 8 - காஸ்ட்ரோ ஹவானா வந்து சேர்கிறார்.
மே 17 - உழவுத்துறையை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.
ஜூன் 2 - சேவும், அலெய்டா மர்ச்சும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
ஜூன் 12 - வணிகம் மற்றும் தொழிநுட்ப ஒப்பந்தங்களை தீர்மானிப்பது தொடர்பாக சே நீண்ட பயணத்தை மேற்கொண்டு
ஐரோப்பா , ஆபிரிக்கா , மற்றும்
ஆசிய நாடுகளுக்கு செல்கிறார்.
அக்டோபர் 7 - உழவுத்துறையின் மறுமலர்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில் சே தொழிற்றுறைக்கு தலைவராக நியமிக்கப்படுகிறார்.
நவம்பர் 26 - சே, தேசிய வங்கியின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
1960
அக்டோபர் – சோவியத் கூட்டமைப்பு ,
கிழக்கு ஜெர்மனி ,
செக்கோஸ்லோவேகியா , சீனா,
வடகொரியா ஆகிய நாடுகளுக்கு இரண்டுமாத சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளுதல்
நவம்பர் 24 - சே - அலெய்டாவின் முதற்குழந்தை அலேய்தித்தா பிறக்கிறாள்.
1961
ஜனவரி 3 - அமெரிக்க அரசு கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்கிறது.
பெப்ரவரி 23 - சேவை அமைச்சராக்கி தொழிற்றுறை அமைச்சகம் நிறுவப்படுகிறது.
ஆகஸ்ட் 8 - உருகுவேயில் நடைபெற்ற அமெரிக்க நாடுகள் அமைப்பின் கருத்தரங்கில் கியூபாவின் சார்பில் சே உரை நிகழ்த்துகிறார்.
1962
மே 20 - சேவுக்கும் அலெய்டாவுக்கும் கமீலா பிறக்கிறான்
[ஆகஸ்ட் 27]] - சே சோவியத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்
1963
ஜூன் 14 - சே வுக்கும் அலெய்டாவுக்கும் சிலியா பிறக்கிறாள்.
[[ஜூலை 3 – பிரான்சிடமிருந்து அப்போதுதான் சுதந்திரம் பெற்ற
அல்ஜீரியாவுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டின் அதிபர் அகமது பென் பெல்லாவை சந்திக்கிறார்.
1964
பெப்ரவரி 24 - சே வுக்கும் அலெய்டாவுக்கும் எர்னஸ்டிடோ பிறக்கிறான்.
[[மார்ச் 14 - சே கியூபா திரும்புகிறார்.
அக்டோபர் 31 - காங்கோவின் புரட்சிப்படையினருக்கு பயற்சி தர ஒரு கியூப படைக்குழுவினரோடு தாமும் காங்கோ புறப்படும் சே, விடை பெற்றுக்கொள்வதாக ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு கடிதம் எழுதுகிறார்.
டிசம்பர் - காங்கோ படையெடுப்பு தோல்வியடைந்ததன் பிறகு சே இரகசியமாக கியூபாவுக்கு திரும்பி வருகிறார். பொலிவியா படையெடுப்புக்காக வீரர்களை திரட்டுகிறார்.
1966
நவம்பர் - சே மாறு வேடத்தில் பொலிவியா போய் சேருகிறார்.
1967
மார்ச் 23 - முதல் கரந்தடி தாக்குதலில் சேவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை சிதறடிகிறது.
ஏப்ரல் 16 - ஆசிய, ஆபிரிக்க, லத்தீனமரிக்க நாடுகளின் ஒற்றுமைக்காக நடத்தப்பட்ட முக்கண்டக் கருத்தரங்கில் இரண்டு மூன்று அல்ல, பல வியட்நாம்களை படைக்கலாம் என்ற சேவுடைய அறிக்கை வாசிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 4 - ஒரு விட்டோடி, பொலிவிய படைக்கு தலைமை தாங்கி நடத்தி சே அணியின் ஆயுத தளத்தை நோக்கி முன்னேறுகிறான்.
செப்டெம்பர் 26 - கரந்தடி வீரர்களை பொலிவிய அரச படைகள் சுற்றிவளைக்கின்றன.
அக்டோபர் 8 - மிஞ்சியிருந்த சே உட்பட 17 வீரர்களும் பொறிக்குள் அகப்பட்டுக்கொள்கிறார்கள். போரில் காயமடையும் சே கைதுசெய்யப்படுகிறார்.
அக்டோபர் 9 - சே கொலைசெய்யப்படுகிறார்.
அவரது இறுதிக்கூற்று வருமாறு:
“ "என்னைக் கொல்வதற்காகவே இங்குள்ளாய், என்பதெனக்குத் தெரியும். சுடு, கோழையே.., ஓர் ஆளைதான், நீ கொல்லப் போகிறாய்"
("I know you are here to kill me. Shoot,coward, you are only going to kill a man") ”
1968
ஜூலை 1 - பிடல் காஸ்ட்ரோவின் முன்னுரையுடன் சேவின்
பொலிவிய நாட்குறிப்பு கியூபாவில் வெளியிடப்படுகிறது.
1995 - கொலை செய்து புதைக்கப்பட்ட சேவினதும் மற்ற இரு வீரர்களதும் உடலங்களை தேடியெடுக்கும் பணி தொடங்குகிறது.
1997
ஜூன் 28 - பொலிவியாவின் வேலேகிரான்ட் அருகே கனடா தே அர்ரோயாவில் ஏழு வீரர்களின் சடலங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.
ஜூலை 14 - சடல எச்சங்கள் கியூபாவை வந்தடைகின்றன.
அக்டோபர் 13 - ஹவானா புரட்சி சதுக்கத்தில் விழா நடைபெறுகிறது.
அக்டோபர் 14 - சேவின் சடல எச்சங்கள் சாண்டா கிளாராவுக்கு மாற்றப்படுகின்றன.
சே குவேரா... ஒரு மனிதாபிமான போராளி பிறந்த நாள் இன்று!
இந்த உலகம் மகா சுயநலமானது, போராட வருபவர்கள் கூட தன் இனம், தன் மதம், தன் மொழி, தன் நாடு என்றுதான் போராட வருவார்கள். அப்படித்தான் பல புகழ்பெற்ற போராளிகளை உலகம் கண்டிருக்கின்றது, அதாவது கலைஞரின் வசனத்தில் சொல்வதென்றால் "அந்த பொதுநலத்திலே சுயநலமும் கலந்திருக்கின்றது" மறுக்க முடியாது.
ஆனால் முதலும், கடைசியுமாக மனித அடக்குமுறைகு எதிராக, ஒருவன் நாடு கடந்து, எல்லை கடந்து, போராடும் மக்களுக்காக சென்று போராடி உயிர்விட்டான் என்றால் வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரே பெயர் சே குவேரா.
அவர் இயற்பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (ஜூன் 14, 1928), அதாவது வாய் நிறைய கூழாங்கற்களை போட்டு, ஸ்பானிய மொழியினை உச்சரித்தால் வரும் பெயர். சே என்பது ஒரு வியப்புச்சொல் என்கின்றார்கள், அதாவது நமது தமிழில் வியப்பின் உச்சத்தில் ஒரு ஆச்சரியமாக சொல்வோம் அல்லவா? அந்த ஆச்சரியமான உச்சரிப்புத்தான் என்கின்றார்கள்.
அர்ஜெண்டினாவில் பிறந்தவர், தந்தை இடதுசாரி, இவர் வீட்டில் பெரிய குடும்பத்தின் செல்லப் பிள்ளை. அக்காலங்களில் ஸ்பெயினை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடந்த காலம், குவேரா அந்த பின்னணியில் வளர்ந்தார். ஒரு மனிதன் படிக்கவேண்டிய அத்தனை வரலாறுகளை, அதாவது மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் என சகலரையும் படித்தார்.
முக்கியமாக தென் அமெரிக்க நாடுகளில் முதல் புரட்சியாளனாக கருதபடும் ஜோஸ் மார்த்தி எனும் பெரும் போராளியினை குருவாகவே நினைத்து வளர்ந்தார்,
பின் மருத்துவ கல்லூரி மாணவர்தான், ஆயினும் விடுமுறையில் மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்காவைச் சுற்றினார். மனம் நொந்தார்.
காரணம் இந்த உலகிலே இயற்கை செல்வங்கள் கொட்டிகிடக்கும் பூமி அது, பெய்யாத மழை இல்லை, விளையாத பொருள் இல்லை. தரையினை தோண்டினால் முழுக்க கனிம வளம். ஆனால் மக்கள் ஏழைகள், இதுதான் அவரைச் சிந்திக்க வைத்தன.
அப்பொழுது கியூபா புலிக்கு தப்பி சிங்கத்திடம் விழுந்திருந்தது, அதாவது ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் வாங்கி, அமெரிக்க கைப்பொமையான பாடிஸ்டாவிடம் சிக்கி இருந்தது. பிடல் காஸ்ட்ரோ கைதுசெய்யபட்டு நிபந்தனை பேரில் விடுவிக்கபட்டிருந்தார்.
பொதுவாக தென்னமெரிக்க நாடுகள் மகா வித்தியாசனமானவை, எல்லா ஊழலையும் ஆள்பவர் செய்வார், இதுக்குமேல் சுரண்ட ஒன்றுமில்லை என்றவுடன் சொத்து பத்துக்களோடு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடுவார், அடுத்த அதிபர் வருவார், பின் அவர் சொத்து சேர்க்க ஆரம்பிப்பார்.
கனிம வளத்திற்காக, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் இப்படி ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தன. அப்படி கியூபாவின் பெரும் செல்வம் கரும்பும் தன் சீனியும்.
நான் இரும்பு மனிதன், எனக்கு பின் அமெரிக்கா இருக்கின்றது என காட்டாட்சி நடத்திகொண்டிருந்த பாடிஸ்டாவிற்கு எதிராக தாககுதல்களை நடத்திக் கொண்டிருந்தார் பிடல் காஸ்ட்ரோ, அது தோல்வியில் முடிந்துகொண்டிருந்தது.
அப்பொழுதுதான் அங்கு சென்றார் சே. அதுவரை நடந்த கொரில்லா முறையினை மாற்றினார். மிக துல்லியமான தாக்குதல்கள். அதன் பிண்ணணியில் மக்களை இணைக்கும் அரசியல் என கியூபாவில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திக் காட்டினார், பாடிஸ்டா பறந்தே விட்டார். (பெரும் வரலாறு இது, விரிவாக சொன்னால் 1 வாரம் ஆகும்).
ஆட்சி காஸ்ட்ரோவின் கைகளில் வந்தது. உலகெல்லாம் மிரட்டிய அமெரிக்காவிற்கு தன் காலடியில் பெற்ற தோல்வி சகிக்கவில்லை. ஆனாலும் மக்கள் சக்திமுன் என்ன செய்ய?
ஆட்சிக்கு வந்த காஸ்ட்ரோ, சே க்கு பெரும் பொறுப்புக்களை கொடுக்க முன்வந்தார், கிட்டதட்ட நம்பர் 1 இடம். நினைத்திருந்தால் சாகும்வரை கியூப ராஜதந்திரியாக வாழும் வாய்ப்பு சே விற்கு வந்தது.
பதவியினை துச்சமாக நினைப்பவன் போராளி. தனக்கு அதில் விருப்பமில்லை. உலகெல்லாம் போராடும் மக்களுக்கு உதவுவதே தன்பணி என சொல்லிவிட்டு , யாருக்கும் சொல்லாமல் கண்டம் கடந்தார்.
ஆம் எல்லை கடந்து கியூப விடுதலைக்கு போராடியவர், இப்பொழுது ஆப்ரிக்காவின் காங்கோ நாட்டிற்கு வந்தார்.
ஆனால் ஆப்ரிக்கர்களை இணைப்பது அவருக்கு தமிழ்நாட்டில் தமிழர்களை ஒருங்கிணைப்பது போலவே வெகு சிரமாக இருந்தது, ஆளாளுக்கு ஒரு நியாயம் பேசிக்கொண்டிருந்தார்கள். மனம் நொந்த சே மீண்டும் தென்னமெரிக்கா திரும்பினார்.
இந்த காலகட்டத்திற்குள் சே வினை காணாத அமெரிக்கா, காஸ்ட்ரோ பதவி சண்டையில் கொன்றுவிட்டதாகக் கதை கட்டிவிட்டது. காஸ்ட்ரோவிற்கும் பதில் சொல்லத் தெரியவில்லை, காரணம் சே இருக்குமிடம் அவருக்கும் தெரியவில்லை,
ஆனால் இப்படிச் சொன்னார், "எனது நண்பன் நிச்சயம் எங்காவது அடிமைபட்ட இனத்திற்காக உழைத்துகொண்டிருப்பான்".
மீண்டும் சே வந்து மக்களிடம் தோன்றினார். தென் அமெரிக்கா முழுக்க அவருக்கு ஆதரவு பெருகிற்று. வாழும் லெனினாக கூட அல்ல, அதற்கும் மேலாக உலகம் அவரை கொண்டாடிற்று, அவரின் மனிதநேயம் அப்படி.
கியூப அரசின் சார்பாக உலகெல்லாம் சுற்றினார், உலகென்றால் அன்று சுதந்திரம் பெற்றிருந்த நாடுகளின் மக்களைக் காணச் சென்றார். இந்தியாவுக்கும் வந்து இந்திய விவசாயிகளின் நிலையினை கண்டு அதனை நேருவுடன் விவாதித்தார். இந்திய கியூப உறவுகள் தொடரவேண்டும் என்றார்.
இலங்கைக்குச் சென்று தேயிலை தோட்ட தமிழர்களை சந்தித்தார். உலகிலே மலையக தமிழர்களையும் மனிதர்களாக மதித்து சந்தித்த தலைவர் கடந்த வருடம்வரை அவர்தான். இந்த வருடம் தான் மோடி இரண்டாவதாக இடம் பிடித்தார்.
இப்படியாக உலகெல்லாம் கொண்டாடபட்ட அந்த சே, அமெரிக்காவிற்கு எப்படி எரிச்சலூட்டியிருப்பார். அமெரிக்க தலைமை வேறுவிதமாக சிந்தித்தது, பக்கம் பக்கமாக அறிக்கைகள் மேலிடத்திற்கு அனுப்பபட்டன. அவை இப்படி சொன்னது:
உலகெங்காம் பெரும் செல்வாக்கினைப் பெற்றுவரும் சே, இப்படியே விட்டால் தென் அமெரிக்க நாடுகளை இணைத்து சோவியத் ஒன்றியம் போல ஒன்றை எளிதாக அமைத்துவிடலாம் ( சாத்தியம் இருந்தது). அதாவது மத உரிமைகளில் அவர் விட்டுக்கொடுத்தால் எல்லா கத்தோலிக்க நாடுகளும் இணையத் தயார். ஒரு லெனினை,ஸ்டாலினை மண்டையில் போட்டு தள்ளாததன் விளைவு, நமக்கு நிரந்தர எதிரியினை உருவாக்கிவிட்டது. சே உழைக்கும் மக்களால் கொண்டாடபடுகின்றார் என்றால், அதன் மறுஅர்த்தம் அமெரிக்கவிற்கு அவரின் வளர்ச்சி நல்லதே அல்ல."
அதற்காக சே வினை விமான நிலையத்தில் சுடமுடியாது. சே வின் பெரும் பலவீனம் அல்லது பெரும் பலம் எங்கு உரிமை போராட்டம் நடக்கின்றதோ அங்கு நிற்பது, சண்டையோடு சண்டையாக போட்டு தள்ள திட்டமிட்டது அமெரிக்கா.
சிஐஏ களத்தில் இறங்கிற்று, காஸ்ட்ரோ கடும் பாதுகாப்பில் கியூபாவில் வாழச்சொல்லியும் சொல்லாமல் கொள்ளாமல் பறந்தார் சே.
சிஐஏ கண்ணி வைத்த இடம் பொலிவியா, அங்கு சண்டையினை தீவிரப்படுத்தினார்கள், வழக்கம்போல வந்து நின்றார் சே. சண்டை உச்சத்தை அடைந்தது.
அக்டோபர் 9, 1969... அந்த மாலைபொழுதில் ஒரு ஆற்றைக் கடந்தார். அங்கு ஆடுமேய்த்துகொண்டிருந்த பெண்மணியினை பார்த்து பரிதாபபடு 50 பெசோ கொடுத்து நலம் விசாரித்து சென்றார், அப்பெண்மணி சி.ஐ.ஏ உளவாளி என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
அமெரிக்கப் படைகள் சுற்றி வளைத்தன. அக்கிராமத்தின் ஒரு பள்ளியில் சிறைவைக்கபட்டார். சுற்றிப் பார்த்து அவர் சொன்ன சொல் வரலாற்றில் நின்றது, "இது என்ன இடம், பள்ளி கூடமா? இவ்வளவு அசுத்தமா?, நல்ல பள்ளிக் கூடங்கள் நாட்டின் பெரும் தேவையல்லவா!"
சாகும்பொழுதும் எப்படி சிந்தித்திருக்கிறார் பார்த்தீர்களா? இதுதான் சே.
விசாரித்து தீர்ப்பளித்தால் சிக்கல் பெரிதாகும். உலகம் கொந்தளிக்கும் எனக் கருதிய அமெரிக்கா அங்கேயே சுட்டுகொல்லத் தீர்மானித்தது. நெஞ்சை நிமிர்த்தி இரு கைகளையும் விரித்து நின்றார் அவர், அன்று அவருக்கு வயது வெறும் 39.
எல்லை கடந்து வந்து தனது நாட்டிற்காய் போராடிய ஒப்பற்ற தலைவன் சே வின் மரணம் கியூப மக்களை மட்டுமல்ல, உலக மக்களையே சோக கடலில் ஆழ்த்தியது
அவரை சுட்டவீரன் சொன்னான், "முகத்தில் தாடியோடு, கலைந்த முடியோடு அவர் கைவிரித்து நின்ற சே வின் காட்சி அப்படியே இயேசுபிரானை கண்முன் நிறுத்திற்று" என சொல்லி பின்னர் அழுதான்.
அது நிதர்சனமான உண்மை. ஒடுக்கபட்டோருக்கு போராடிய இயேசுவின் வரிசையில் நிச்சயம் இந்த நாத்திக சே விற்கும் இடம் உண்டு.
ஒரு தேசத்தில் போராடச் சென்றபொழுது அவரிடம் கேட்டார்கள், "எங்களுக்காக நீங்கள் ஏன் போராடவேண்டும்? என்ன அவசியம்"
ஆஸ்மா நோயாளியான அவர், அன்று நோயின் அதிக தாக்கத்திலும் மெதுவாக சொன்னார், "அக்கிரமத்தினை கண்டு, விடுதலைக்காக போராடினால் நீ நிச்சயமாக எனது நண்பன்"
இன்று அவரின் பிறந்த நாள். அவரை நினைவு கூற கம்யூனிஸ்டாகவோ அல்லது தென் அமெரிக்கனாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை.
சக மனிதனை நேசிக்கத் தெரிந்த, உலகெல்லாம் சிதறி ஈழத் தமிழரை போல அகதிகளாய் வாழும், சிரியாவிலிருந்து, லிபியாவிலிருந்து, பர்மாவிலிருந்து பராரியாய் திரியும் மனிதர்களைப் பார்த்து ஒரு துளி கண்ணீர் விடும் மனம் போதும்.
மகான்களும், அவதாரங்களும் மட்டும் நிலையான அடையாளத்தைப் பெறுவதில்லை, மனிதனை மனிதனாக நேசிக்கத் தெரிந்த யாரையும் இந்த உலகம் மறக்காது.
அதில் சே என்றும் முதல் இடத்தில் இருப்பார்.
ஈழ மலையகத்தில் அவர் தன் கையினால் நட்டுவைத்த மரம் இன்றும் உண்டு. அது பெரிதாக வளர்ந்திருக்கும் அளவிற்கு இன்று அங்கு பிரச்சினைகளும் வளர்ந்திருக்கின்றன.
ஒன்றுமட்டும் உண்மை, சே வின் சம காலத்தில் ஈழப் போராட்டம் தீவிரமடைந்திருந்தால், நிச்சயம் அவரோடு இணைந்து கொள்ள சே ஓடிவந்து முதல் ஆளாக நின்றிருப்பார்.
காரணம் இதுவரை வரலாறு கண்ட மனிதநேயமிக்க போராளிகளில் எல்லை கடந்து மனிதம் வாழட்டும் எனப் போராடிய ஒரே போராளி சே மட்டுமே. சே குவாரேவிடம் தன்னலம் என்பதெல்லாம் இல்லை, அவர் மனதில் நிறைந்திருந்ததெல்லாம் மானிட நேயம் மட்டுமே.
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்றான் வள்ளுவன், சே உயிரையும் கொடுத்து உயர்ந்து நின்றான், வரலாற்றில் நின்றான்.
அவனுக்கு அழிவே இல்லை.
அந்த மனித நேயமிக்க மாவீரனான சே குவாரேவிற்கு அஞ்சலிகள்!
- ஸ்டான்லி ராஜன்
சே குவேரா எனும் சாகசக்காரன்! #HappyBirthdayCH
இதே ஜூன் 14, 1952-ஆம் வருடம். அவர் அமேசான் மழை காடுகளில் இருக்கும் சான் பாப்லோவில் இருந்தார். அன்று அவருக்கு 24-வது பிறந்தநாள். சகல வசதிகளுடன் அவர் தங்கியிருந்த இடத்துக்கு வெளியே ஓர் ஏரி இருந்தது. அதற்கு அருகில், அடிப்படை வசதிகள்கூட இல்லாத நோயாளிகளும் ஏழைகளும் இருந்தனர். தனது பிறந்தநாள் விழா, ஆடம்பரத்துக்கு நடுவில் நடைபெறுவதை அவர் விரும்பவில்லை. குளிர்ந்த அந்த ஏரிக்குள் ஆஸ்துமா நோயாளியான அவர் குதித்தார். பெரு மூச்சு வாங்கி, அவர் நீந்தி முன்னேறினார். இருபக்கமும் இருந்த மக்கள் அவரை உற்சாகப்படுத்தினார்கள். ஆஸ்துமா நோய், அமேசானின் குளிர்ந்த ஏரி யாவையும் கடந்து அவர் தனது இலக்கை அடைந்தார். இப்படியான சாகசங்களையே அவர் வாழ்நாள் முழுவதும் விரும்பினார். அவர் பெயர் எர்னஸ்டோ குவேரா டி லா செர்னா. சுருக்கமாகச் சொன்னால் 'சே குவேரா'. எதார்த்தங்களை கடந்த அசாத்தியங்களை விரும்பியப் போராளி. தனக்கென ஒரு கூடு இல்லாமல் சுற்றி திரிய நினைத்த ஒரு ஜிப்ஸி. இன்று அவருக்குப் பிறந்தநாள்!
சேகுவேரா இந்த உலகம் முழுவதையும் ரசித்தார். பார் முழுவதும் பயணம் செய்ய ஆசைப்பட்டார். அதன் வித்தாய் அமைந்ததுதான் சே -அல்பர்ட்டோவின் மோட்டார் சைக்கில் பயணங்கள். மருத்துவம் பயின்ற இருவரும் 'லா பெடரோசா' பைக்கில், தென் அமெரிக்காவைச் சுற்றிவர வேண்டும் என தீர்மானித்தார்கள். அதன்படி தனது குடும்பத்திடம் இருந்து விடைபெற்று அவர்கள் கிளம்பினர். அர்ஜென்டினாவில் ஆடம்பரமான ஒரு வாழ்க்கை இருந்தும் சேவுக்கு புதிய விஷயங்களைத் தேட ஆசை. அதற்காக தனது காதலியிடம் இருந்தும் அவர் விடைபெற்று கொண்டார். தனக்கென நிலையான வசிப்பிடத்தோடும் மனிதர்களோடும் வாழ்வதை சே அசௌகரியமாக கருதினார். அதனால்தான் அவர் தென் அமெரிக்கா முழுவதும் சுற்றித்திரிந்தார்.
நீண்ட பயணத்துக்கு பின்னர், அன்று ‘சே’வும் அல்பர்ட்டோவும் வெனிசுலாவில் இருந்தனர். அல்பர்ட்டோவுக்கு, 'பயணத்தை முடித்துக்கொள்ளலாம்' என தோன்றிவிட்டது. 'நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதுதான் தனது கடமை' என அல்பர்ட்டோ நினைத்தார். ஆனால் சே அதற்கு எதிர்மறையாக தனது பயனத்தைத் தொடர விரும்பினார். 'அடிப்படை வசதிகள்கூட இல்லாமல், அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு எதாவது பெரிதாக செய்ய வேண்டும்' என்ற கனவு அவரை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. அந்த பயணத்தின்போது, குச்சிகாமாட்டா சுரங்கங்களையும் அங்கு நடக்கும் சுரண்டல்களையும் நேரில் கண்டார். ஏழ்மை நிலையிலும் கொள்கையில் உறுதியோடு இருக்கும் கம்யூனிச தம்பதியைப் பார்த்தார். துயரப்படும் தொழு நோயாளிகளைக் கண்டார். பழமையான நாகரிகங்கள் சிதைக்கப்பட்டதைப் பார்த்தார். மொத்தத்தில் அமெரிக்காவின் எதேச்சதிகாரத்தை உணர்ந்தார். இதன்பின்னரே, 'இம்மக்கள் சுதந்திரமாக வாழ வேன்டும்' என்று அவருக்குத் தோன்றியது. 'அதற்கான போராட்டங்கள் அனைத்தும் துப்பாக்கியைத் தாங்கி நடக்க வேண்டும்' எனத் தீர்மானித்தார். வெனிசுலாவில் தனது நண்பனைப் பிரிந்து, வாழ்வின் அடுத்த சாகசத்துக்கு தயாரானார் ‘சே’. அடுத்த 10 வருடங்களுக்கு அவர் அல்பர்ட்டோவைச் சந்திக்கவில்லை.
கியூபாவின் புரட்சியை தவிர்த்துவிட்டு, சேகுவேராவை எழுதிவிட முடியாது. எங்கோ அர்ஜென்டினாவில் பிறந்து, கியூப விடுதலைக்காக போராடவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. ஆனால் அவர் விலங்கு பூட்டப்பட்ட மக்களின் விடுதலையிலும் ஃபிடல் காஸ்ட்ரோவின் மீதான நட்பிலும் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தார். மருத்துவம் பயின்ற ஒருவர், ஆஸ்துமா நோயுடன் கைகளில் துப்பாக்கி ஏந்தி படைத் தளபதியாக செயல்பட முடியுமென்றால், அது சேகுவேரா எனும் சாகசக்காரனால்தான் முடியும். சேவும் காஸ்ட்ரோவும் இணைந்து நடத்திய புரட்சியால் அமெரிக்காவின் கைப்பாவையான பாடிஸ்டா ஆட்சியில் இருந்து வீழ்ந்தார். காஸ்ட்ரோவைக் கியூப மக்கள் தலைவராகக் கொண்டாடினார்கள். தலைநகர் ஹவானா உற்சாகக் கோலம் பூண்டது. ' இனி கியூப மக்கள் அமெரிக்காவின் அடிமையாக இருக்கப்போவதில்லை' என்ற மகிழ்ச்சி அனைவரிடத்திலும் ஏற்பட்டது. தங்கள் நாட்டைச் சேர்ந்தவர் போலவே சேகுவேராவை கியூப மக்களும் காஸ்ட்ரோவும் கொண்டாடினார்கள். சேகுவேராவுக்கு அரசு பதவியும் கியூப நாட்டு கரண்சியில் 'சே' எனக் கையெழுத்திடம் கவுரவுமும் வழங்கப்பட்டது.
ஆடம்பரங்களையும் உதறித்தள்ளிவிட்டு, 'காங்கோவில் நடக்கும் ஆயுத புரட்சிக்கு உதவ போகிறேன்' என காஸ்ட்ரோவிடமிருந்து விடைபெற்று கொண்டார் ‘சே’. உடனே, “ 'சே’வை காணவில்லை; அவரை ஃபிடல் கொன்றுவிட்டார்” என பேசப்பட்ட போதிலும், “ 'சே’ எங்கு இருக்கிறார்” என்று காஸ்ட்ரோ சொல்லவில்லை. காரணம், 'அமெரிக்க உளவுதுறையிடம் அவர் சிக்கி கொள்ளக் கூடாது' என்பதற்காகத்தான். இப்படியான ஒரு தோழனை விட்டும் செல்லும் நிலை சேவுக்கு ஏற்பட காரணம், உலக மக்களின் விடுதலை மீது அவருக்க இருந்த பெரு விருப்பம்தான்.
காங்கோவில் இருந்து பொலிவியா வந்த சேகுவேரா, அங்குள்ள சிறு ஆயுதக் குழுக்களுக்கு கெரில்லா பயிற்சிகளை அளித்தார். புதிய நாடு, வித்யாசமான தட்பவெட்ப சூழ்நிலை என பொலிவியாவில் சிரமத்தை எதிர்கொண்டார். அதற்கெல்லாம் அவர் அஞ்சவில்லை. ஒருகட்டத்தில், (1967-ம் வருடம் அக்டோபர் மாதம்) அமெரிக்க படைகளால் சுற்றி வளைக்கப்பட்டார் சேகுவேரா. உலக முதலாளித்துவத்துக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கிய சேகுவேரா பிடிப்பட்டதை அமெரிக்க அதிகாரிகளால் எளிதில் நம்ப முடியவில்லை. பொலிவியாவில் உள்ள பள்ளிக்கூடத்தில் அவர் சிறைவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உணவு வழங்க ஒரு பணிப்பெண் நியமிக்கப்பட்டார். அவரிடம், 'இது என்ன இடம்?' என்று கேட்டார் ‘சே’. 'இது ஒரு பள்ளிக்கூடம்' என்றார் பணிப்பெண். 'இப்படியொரு மோசமான நிலையில் ஒரு பள்ளிக்கூடமா... எங்களின் போராட்டம் வெற்றி பெறட்டும், உங்களுக்கு புதிய பள்ளி ஒன்றைக் கட்டி தருகிறோம்' என்று கூறினார் ‘சே’. அந்த பணிப்பெண் வெடித்து அழுது அங்கிருந்து கிளம்பினார். தான் இறக்கப்போவது தெரிந்த நிலையிலும், போராட்டங்கள் மீதும் மாற்றத்தின் மீதும் மிகப் பெரிய நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால்தான் அவர் அசாத்தியங்களை விரும்பும் எதார்த்தவாதியாக இருந்தார்.
அக்டோபர் 9, சேகுவேரா சுட்டுக் கொல்லப்பட்டார். 'நீ ஒரு கோழையை சுடவில்லை. ஒரு வீரனைத்தான் சுடுகிறாய்' என தோட்டாக்களை தனது நெஞ்சில் வாங்கி கொண்டார். அவர் மறைந்து 50 வருடங்கள் ஆகப் போகின்றன. ஆனால், இன்றும் ‘சே’ கொண்டாடப்படுகிறார். கியூபாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும். இப்போதும் இளைஞர்களின் சட்டைகளிலோ, போராட்டக் களத்திலோ சேகுவேரா புகைப்படங்கள் அலங்கரிக்கின்றன. உலக மக்களின் விடுதலைக்காக அவர் போராடினார். இந்த உலகுக்கே அவர் பொதுவானவர். அடக்குமுறைகள் இருக்கும் வரையில் போராட்டங்கள் நீடித்துக் கொண்டுதான் இருக்கும். போராட்டங்கள் இருக்கும் வரையில் ‘சே’வும் மக்கள் நினைவுகளில் வாந்துகொண்டுதான் இருப்பார். நன்றி விகடன்.
Comments
Post a Comment