தினத்தந்தி பவள விழா..
தினத்தந்தி’யின் பவள விழா நேற்று சென்னையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் பேசிய பிரதமர் மோடி, ‘தினத்தந்தி’க்கு புகழாரம் சூட்டினார்.
சென்னை,
உலக தமிழர்களின் வாழ்வோடு இரண்டற கலந்து விட்ட ‘தினத்தந்தி’, ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரால் 1942-ம் ஆண்டு மதுரையில் தொடங்கப்பட்டது.
இந்தியாவின் ‘நம்பர் 1’ தமிழ் நாளிதழ் என்ற சிறப்புடன் விளங்கும் ‘தினத்தந்தி’ 75 ஆண்டுகளை கடந்து தொடர்ந்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. ‘தினத்தந்தி’ தனது பவள விழா ஆண்டை பூர்த்தி செய்து இருக்கிறது.
இதையொட்டி, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று ‘தினத்தந்தி’யின் பவள விழா கோலாகலமாக நடைபெற்றது. இதற்காக அங்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
விழாவுக்கு வந்திருந்த பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பவள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதற்காக காலை 10.30 மணி அளவில் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்துக்கு வந்த பிரதமர் மோடியை ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், ‘மாலைமலர்’ நிர்வாக இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று விழா மேடைக்கு அழைத்துச் சென்றனர்.
விழா அரங்கில் ‘தினத்தந்தி’ படக்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. அந்த படக்காட்சியில் இடம் பெற்றிருந்த நிகழ்வுகளை பிரதமர் மோடிக்கு தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் விளக்கி கூறினார்.
தமிழ்நாட்டில் எந்தெந்த நகரங்களில் இருந்து ‘தினத்தந்தி’ அச்சாகி வெளியாகிறது என்ற படத்தையும் பிரதமர் மோடிக்கு சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் காண்பித்தார்.
பிரதமர் மோடி விழா மேடைக்கு வந்ததும், அரங்கில் கூடி இருந்த அனைவரும் எழுந்து நின்று அவரை வரவேற்றனர். கூட்டத்தினரை பார்த்து பிரதமர் மகிழ்ச்சியுடன் கைகூப்பி வணங்கி விட்டு பின்னர் இருக்கையில் அமர்ந்தார்.
விழா மேடையில் பிரதமருடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் ஆகியோர் அமர்ந்து இருந்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. பிறகு பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பொன்னாடை, சந்தன மாலை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்.
கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு ‘மாலைமலர்’ நிர்வாக இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் பொன்னாடை, சந்தன மாலை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்.
அதன்பிறகு சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், விழாவுக்கு வந்திருந்தவர்களை வரவேற்று பேசினார். அவரை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை நிகழ்த்தினார்.
அதைத்தொடர்ந்து, ‘தினத்தந்தி’ பவள விழா மலரை பிரதமர் மோடி வெளியிட்டார். அதை சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பெற்றுக்கொண்டார். அதன்பிறகு மேடையில் இருந்த தலைவர்களுக்கு பவள விழா மலரின் பிரதிகளை சி.பாலசுப்பிரமணிய ஆதித்தனும், பா.சிவந்தி ஆதித்தனும் வழங்கினார்கள்.
அதன்பிறகு ‘தினத்தந்தி’ இலக்கிய பரிசு, விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறந்த இலக்கிய நூலுக்கான பரிசை ‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற புத்தகத்தை எழுதிய ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்புவுக்கு, பிரதமர் மோடி வழங்கினார். ‘மூத்த தமிழறிஞர்’ விருதை ஈரோடு தமிழன்பனுக்கும், சாதனையாளர் விருதை தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷத்துக்கும் அவர் வழங்கினார்.
பின்னர், பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றினார். முதலில், “அனைவருக்கும் வணக்கம்” என்று கூறிவிட்டு, பின்னர் அவர் ஆங்கிலத்தில் பேசினார்.
பிரதமர் மோடி தனது பேச்சின் போது ‘தினத்தந்தி’யின் சேவைகளையும், சாதனைகளையும் பாராட்டி புகழாரம் சூட்டினார்.
அவர் பேசுகையில் கூறியதாவது:-
‘தினத்தந்தி’ பத்திரிகை போற்றத்தக்க வகையில் 75 ஆண்டுகளை நிறைவு செய்து உள்ளது. இந்த வெற்றிப் பயணத்துக்கு பங்களித்துள்ள சி.பா.ஆதித்தனார், பா.சிவந்தி ஆதித்தனார் மற்றும் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் ஆகியோரை நான் மிகவும் பாராட்டுகிறேன்.
கடந்த 75 ஆண்டுகளாக அவர்கள் எடுத்துள்ள பெருமுயற்சிகள், ‘தினத்தந்தி’யை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே மிகப்பெரிய பத்திரிகையாக உருவெடுக்கச் செய்து உள்ளது. ‘தினத்தந்தி’யின் வெற்றிக்கு பாடுபட்ட அதன் நிர்வாகம் மற்றும் ஊழியர்களையும் நான் பாராட்டுகிறேன்.
இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு 24 மணி நேர செய்திச்சேனல் கள் கிடைத்து உள்ளன. இன்றும் பலர் தங்கள் நாட்களை ஒரு கையில் காபி அல்லது டீ-யுடனும், மற்றொரு கையில் செய்தித்தாளை பிடித்து வாசித்தபடியும்தான் தொடங்குகின்றனர். இந்த சிறப்புடன், ‘தினத்தந்தி’ இன்று தமிழகத்தில் மட்டுமல்ல, பெங்களூரு, மும்பை மற்றும் துபாய் உள்பட 17 இடங்களில் இருந்து வெளியாகிக்கொண்டு இருக்கிறது.
கடந்த 75 ஆண்டுகளில் ‘தினத்தந்தி’யின் இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சி, அதை 1942-ம் ஆண்டில் தொடங்கிய தொலைநோக்கு சிந்தனையும், தலைமைப் பண்பையும் கொண்டிருந்த சி.பா.ஆதித்தனாருக்கே புகழ்ச்சியாக அமைகிறது. அந்த காலகட்டத்தில், பத்திரிகையை அச்சிடத் தேவையான ‘நியூஸ் பிரிண்ட்’ என்ற தாள் எளிதாகக் கிடைப்பதில்லை. ஆனாலும் அவர், வைக்கோலை வைத்து கையினால் தயாரிக்கப்பட்ட தாள்களில் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார்.
செய்திகளை உடனே புரிந்துகொள்ளக்கூடிய வகையில் எளிமையான நடை, எழுத்து வடிவம் போன்றவற்றின் மூலம் மக்களிடையே ‘தினத்தந்தி’ மிகவும் பிரபலமானது. அந்த காலகட்டத்தில் அரசியல் விழிப்புணர்வையும் தகவல்களையும் மக்களுக்கு கொண்டு சேர்த்தது ‘தினத்தந்தி’. டீ கடைகளில் இந்த பத்திரிகையை மக்கள் விரும்பிப் படித்தனர்.
அன்றிலிருந்து வெற்றிப் பயணத்தைத் தொடங்கிய ‘தினத்தந்தி’ இன்றும் அதே பயணத்தை தொடர்கிறது. சமநிலையான முறையில் செய்திகளை வெளியிடுவதன் மூலம், தமிழகத்தில் சாதாரண கூலித்தொழிலாளி முதல் மிக உயர்ந்த இடத்தில் உள்ள அரசியல்வாதி வரை ‘தினத்தந்தி’ சென்று அடைகிறது. இந்த விழாவில் முன்வரிசையில் வீற்றிருப்பவர்களை பார்க்கும்போது அதை நான் உணர்கிறேன்.
‘தந்தி’ என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் ‘டெலிகிராம்’ என்று அர்த்தம். ‘தினத்தந்தி’ என்றால், ‘டெய்லி டெலிகிராம்’ என்று அர்த்தம். கடந்த 75 ஆண்டுகளாக, பாரம்பரியம் மிக்க தபால் துறையினரால் வழங்கப்பட்டு வந்த தந்தி தற்போது வழக்கத்தில் இல்லை. ஆனால் இந்த தந்தி (‘தினத்தந்தி’) தினமும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த வளர்ச்சிக்கு கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் பின்னணியில் கொண்ட உயரிய நோக்கம்தான் காரணம்.
‘தினத்தந்தி’யின் நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் பெயரில் விருதுகளை ஏற்படுத்தி, தமிழ் இலக்கியத்தை மேம்படுத்துவதிலும் தினத்தந்தி ஈடுபட்டு வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இதில் தற்போது பரிசு பெற்றிருக்கும் தமிழன்பன், டாக்டர் இறையன்பு, வி.ஜி.சந்தோஷம் ஆகியோரை நான் மனதார வாழ்த்துகிறேன். இப்படி அங்கீகாரம் அளிப்பது, உன்னதமான எழுத்துப் பணியில் ஈடுபட்டு இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஊக்கம் அளிப்பதாக அமையும்.
75 ஆண்டுகள் என்பது மனித வாழ்க்கையில் அதிகபட்சமாக உள்ளது. ஆனால் ஒரு தேசத்துக்கோ அல்லது நிறுவனத்துக்கோ அது குறிப்பிடத்தக்க மைல் கல்லாக அமைகிறது. 3 மாதங்களுக்கு முன்பு நாம், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-வது ஆண்டு நிகழ்வை கொண்டாடினோம். அதுபோல இத்தனை ஆண்டுகால ‘தினத்தந்தி’யின் பயணமும், இளைய துடிப்புள்ள இந்தியாவின் வளர்ச்சியை மக்களுக்கு படம்பிடித்துக் காட்டி வருகிறது.
புதிய இந்தியா 2022-ஐ உருவாக்கும்படி எல்லோருக்கும் அழைப்பு விடுத்து பாராளுமன்றத்தில் பேசினேன். அதாவது, லஞ்ச லாவண்யம், சாதி வேறுபாடு, சமய வேறுபாடு, வறுமை, கல்வியறிவின்மை, நோய்கள் அற்ற இந்தியா உருவாக்கப்பட வேண்டும்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் உருவான நேரத்தில் பிறந்த பத்திரிகையான ‘தினத்தந்தி’க்கு இதில் சிறப்பான பொறுப்பு உண்டு என்று என்னால் கூற முடியும். இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன். அதை உங்கள் வாசகர்களுக்கும், இந்திய மக்களுக்கும் அடுத்த 5 ஆண்டுகளில் பிரதிபலியுங்கள்.
5 ஆண்டு இலக்கை தாண்டி, அடுத்த 75 ஆண்டுகளில் எப்படி இருக்கும் என்பது பற்றி ‘தினத்தந்தி’ சிந்திக்க வேண்டும். தொடர்ந்து நம்பகத்தன்மையை தக்க வைத்து மக்களுக்கு சேவையாற்றும் சிறந்த வழிகள் பற்றி ஆலோசிக்க வேண்டும். அப்படி செய்தால், தொழிலில் உயர்ந்த தரம், தொழில் தர்மம், நோக்கம் ஆகியவற்றில் தொடர்ந்து சிறந்த விளங்க முடியும்.
மீண்டும் ‘தினத்தந்தி’யை பாராட்டும் நேரத்தில், இந்த மாபெரும் தேசத்தின் விதியை வடிவமைப்பதில் ‘தினத்தந்தி’ சாதகமாக உதவி செய்யும் என்று உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
அவர் பேசி முடித்தவுடன் விழா நிறைவு பெற்றது. அனைவரையும் பார்த்து கைகூப்பி வணக்கம் தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி, அரங்கத்தைவிட்டு முக்கிய பிரமுகர்களுக்கான வாயில் வழியாக வெளியே செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவர் மேடையை விட்டு கீழே இறங்கி வந்து, முன் வரிசையில் அமர்ந்திருந்த அரசியல் தலைவர்கள், நடிகர்-நடிகைகள், முக்கிய பிரமுகர்களுக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதை சற்றும் எதிர்பாராத அவர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனார்கள்.
அதன்பிறகு, பிரதமர் நரேந்திரமோடி மீண்டும் மேடைக்கு ஏறி, விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் பார்த்து கைகளை உயர்த்தி வணக்கம் தெரிவித்து விடைபெற்று சென்றார்.
விழா நிகழ்ச்சிகளை டாக்டர் சுதா சேஷய்யன் தொகுத்து வழங்கினார்.
நன்றி : தினத்தந்தி...
தினத்தந்தி நாளிதழ் மேன்மேலும் வளர்ந்து 1000வது ஆண்டு விழா காணும்... வாழ்த்துக்களுடன்..
R.R
tnsocialpedia..
Comments
Post a Comment