அறம்’ அடையாளம்
*என் கருவி 8 குழந்தைகளை போர்வெல்லிலிருந்து மீட்டிருக்கிறது..!” - ‘அறம்’ அடையாளம் காட்டிய மணிகண்டன்*
*#VikatanExclusive*
மூடப்படாத போர்வெல் குழிகளில் ஏதும் அறியாக் குழந்தைகள் விழுந்து, அதை மீட்க முடியாமல் பலியான சம்பவங்கள், நம் நாட்டில் தொடர்ந்து நடந்துவந்தன. 2015-க்கு பிறகு அந்தக் கொடுமையான சம்பவங்கள் குறைந்துள்ளன.
அதற்குக் காரணம், மதுரையைச் சேர்ந்த தமிழர் ஒருவரின் கண்டுபிடிப்பு. ஐ.டி.ஐ ஆசிரியரான மணிகண்டனின் இந்தக் கருவியை தேசப் பாதுகாப்பு அமைப்புகளும் பல்வேறு மாநில நிர்வாகங்களும் பயன்படுத்திவரும் நிலையில், தமிழக அரசோ அவருடைய கண்டுபிடிப்பைப் பயன்படுத்த சுணக்கம்காட்டிவருகிறது.
சமீபத்தில் திரைக்கு வந்துள்ள 'அறம்' திரைப்படத்தில் அவருடைய கண்டுபிடிப்பின் சிறப்பையும் அவருடைய பங்களிப்பையும் அங்கீகரித்து வெளிப்படுத்தியுள்ளதன்மூலம் மக்களின் கவனத்தைப் பெற்றுள்ளார், ஐ.டி.ஐ. ஆசிரியர் மணிகண்டன்.
மதுரை முத்துப்பட்டியில் வசிக்கும் ஆசிரியர் மணிகண்டனை அவருடைய ஆய்வுக்கூடத்தில் சந்தித்தோம்.
“என்னுடைய சொந்த ஊர் கோவில்பட்டி அருகிலுள்ள நாலாட்டின்புதூர். திருநெல்வேலி அரசு ஐ.டி.ஐ-யில் ஃபிட்டருக்குப் பயின்றேன். சிறு வயதிலிருந்தே எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன். படிக்கும்போது, பல புராஜெக்ட்டுகளைச் செய்து பரிசு வாங்கியுள்ளேன்.
அதன்பின், நேஷனல் பொறியியல் கல்லூரியில் 17 வருடங்கள் பணியாற்றிய பிறகு, மதுரை டி.வி.எஸ் சமுதாயக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். அந்த காலகட்டத்தில்தான் எங்கள் ஊரில் என்னுடைய மூன்று வயது மகன் போர்வெல் குழிக்குள் விழுந்துவிட்டான். சிரமப்பட்டாலும் அப்போது மீட்டுவிட்டோம். அதன் பிறகுதான் எனக்கு போர்வெல் குழிக்குள் தெரியாமல் விழுந்துவிடும் குழந்தைகளின் வேதனையும், பெற்றோர்கள் படும் துன்பத்தையும் உணர முடிந்தது. இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமென்று யோசித்ததன் விளைவாகவே இந்தக் கருவியைக் கண்டுபிடித்தேன்.
2003-ல் இந்தக் கருவியைக் கண்டுபிடித்து, அதன்மூலம் நல்ல பலன்கள் கிடைத்ததை சோதனைமூலம் அறிந்துகொண்டேன். இதன் பயன்களைப் பற்றி அரசின் தீயணைப்பு பேரிடர் மீட்புத் துறைக்கு அனுப்பினேன். எந்தப் பதிலும் வரவில்லை.
அதன்பிறகு, அந்தக் கருவியில் பேட்டரியால் இயங்கும் சிறு கேமரா, ரத்தஅழுத்தம் சோதனைசெய்யும் கருவியை இணைத்து, இன்னும் நவீனமாக உருவாக்கினேன். மொத்தம் ஐந்து கிலோ எடையுள்ள இக்கருவியால், ஐம்பது கிலோ வரை எடையைத் தூக்கும் வகையில் செய்து, அதை சென்னை ஐ.ஐ.டி-யில் டெமோ செய்துகாட்டினேன். அவர்கள், என்னைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள். அதன்பின்பு, தமிழக அரசின் தீயணைப்புத் துறையினருக்கு அனுப்பினேன். பிறகு, மூன்று மெஷின்களுக்கு ஆர்டர் கொடுத்தார்கள்.
2013-ல் அதிநவீன வசதிகள்கொண்ட கருவியாக அதை மாற்றினேன். தற்போது, இதன் தயாரிப்புச் செலவு 40,000 ஆகிறது. என்னைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இது போன்றதொரு கருவியை வைத்திருப்பது அவசியம். குழந்தைகள் குழிக்குள் விழுகின்ற மோசமான சம்பவங்கள் நடக்கக்கூடாது என்பதுதான் என்னுடைய பிரார்த்தனை. இருந்தாலும் முன்னேற்பாடாக இக்கருவியை வைத்திருப்பது நல்லது. நெல்லை சங்கரன் கோயிலில் குழந்தையை உயிருடன் மீட்ட பிறகுதான், என் கருவிமீது பலருக்கும் நம்பிக்கை வந்தது. இதுவரை கர்நாடகா, ஆந்திரா என்று பல இடங்களுக்குச் சென்று, எட்டுக் குழந்தைகள் வரை மீட்டிருக்கிறோம். 2015-க்கு பிறகு, குழந்தைகள் குழிக்குள் விழும் சம்பவங்கள் குறைந்துள்ளன என்றாலும், வட மாநிலங்களில் அதிகம் நிகழ்கின்றன. தேசிய பேரிடர் துறையினர், என்னிடம் ஆர்டர் கொடுத்து இக்கருவியை வாங்கியுள்ளனர். சம்பவம் நடந்து ஓரிரு நாள்களான பிறகு நாங்கள் போய் மீட்பதில் பலனில்லை, அதில் குழந்தையின் உயிருக்கு உத்தரவாதம் சொல்ல முடியாது. இக்கருவி அருகில் இருந்தால், உடனே உயிருடன் மீட்க முடியும்.
அரசு ஆதரவும் நிதி உதவியும் கிடைத்தால், குறைந்த செலவில் இக்கருவியைச் செய்துகொடுப்பேன். இளைஞர்களுக்குப் பயிற்சியும் அளிக்கத் தயாராக உள்ளேன். தற்போது, ‘அறம்’ திரைப்படத்தின்மூலம் என்னுடைய கண்டுபிடிப்பின் பயன் மக்களுக்குச் சென்றுள்ளது. இது மட்டுமல்லாமல், எளிய மக்கள் தண்ணீர் எடுக்கப் பயன்படுத்திவரும் அடிபம்ப்புக்கு மாற்றாக, பேட்டரியில் இயங்கும் கருவியைக் கண்டுபிடித்துள்ளேன். சோலார் மோட்டார் பைக், சோலாரில் ஓடும் சைக்கிள் ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளேன். இன்னும் மக்களுக்குத் தேவையான, சூழலைப் பாதிக்காத பல கருவிகளை உருவாக்க வேண்டும் என்பதே என் விருப்பம். அதற்கான பொருளாதார உதவிதான் தேவை” என்ற மணிகண்டனுக்கு, சக ஆசிரியர் திருநாவுக்கரசு போன்றோர் உதவிவருகிறார்கள்.
*வாழ்த்துகள் மணிகண்டன்.*
Comments
Post a Comment