அயல்நாட்டுப் பேய் - தொடர் கதை - பகுதி 2
அயல்நாட்டுப் பேய்
(தொடர்கதை)
பகுதி - 2
ஆசிரியர். மு.வெ.ரா
முன்கதை சுருக்கம் - click here
சற்றே சுற்றும் முற்றும் பார்த்தான். யாருமில்லை .....
மீண்டும் கனவு வானில் சிறகடிக்கத் தொடங்கி விட்டான் ." ஏன் இந்த நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டே இருக்கின்றன? ஒருவேளை சாலை விதிகளில் எச்சரிக்கும் மஞ்சள் விளக்கைப் போல நம்மையும் இந்த பூமியிலிருந்து புறப்படத் தயாராக இருக்கும் படி எச்சரிக்கிறதோ என்னவோ இல்லை அவைகளுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லையோ, அதனால் தான் நம்மைப் போன்றவர்களைப் பார்த்து கண்ணடித்து கவர்கின்றனவோ | இருக்கலாம். அப்படியெனில் அவைகளுக்கும் காதல் தோல்வி ஏற்பட்டிருக்கும் அதனால் தான் தினமும் சில நட்சத்திரங்கள் எரிந்து விழுந்து தற்கொலை செய்து கொள்கின்றன போலும் ".
இப்படியே பல கேள்விகளில் ஆழ்ந்திருந்தான் சாரா. அவனுடைய கவனத்தை சற்றே ஈர்க்கும்படி பாடலொன்று ஒலித்தது அந்த வானொலிப் பெட்டியிலிருந்து . "வான் நிலா நிலா அல்ல... உன்
வாலிபம்நிலா... " உடனே அவன் கண்கள் வானிலே அவளைத் தேடியது . ஆம் இன்றைய நவீன அம்மாக்கள் சுட்டிக்காட்ட மறந்து போகும் அந்த நிலாவைத்தான் தேடின. " எங்கே? எங்கே? எங்கே அவள் ?. பக்கத்தில் தான் இருப்பாள் ஆனால் பார்வையில் உடனே அகப்பட மாட்டாள். ஆ., அதோ அவள்.வாடி வா..' கள்ளி. நான் தேடுகிறேன் என்று தெரிந்தும் எவ்வளவு லாவகமாக மேகத் துண்டுகளுக்குள் மறைந்து கொள்கிறாள் பாரேன், கள்ளி ."
இனி நிலவை விமர்சிக்கத் தொடங்கி விட்டான். 'இந்த நிலவுக்குத்தான் மனிதரிடையே எத்தனைக் காட்சிகள் காதலனுக்கு காதலியாய், காதலிக்கு காதலனாய் , குழந்தைக்கு இரவிச் சூரியனாய், கணவனுக்கு முந்நாள் காதலியாய், கவிஞனுக்கு ஏதேதோ .. . சாராவிற்கு நிலாவைப் பற்றி ஒரு மதிப்பீடு இருந்தது . நிலா பூமியின் கள்ளக் காதலி என்பது தான்."
"இந்த நிலாவுக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லை. பூமியை ஏன் விடாது எப்பொழுதும் சுற்றிக் கொண்டே வருகிறது, அப்படி என்ன தான் உறவோ " இந்த பூமியும் எல்லா ஆண்களைப் போலவே நடந்து கொள்கிறது. இன்பத்தில் மட்டுமே பங்கெடுக்க விரும்பும் ஆண்களைப் போல இரவில் மட்டுமே இவளைக் கண்டு கொள்கிறது. பனியிலும் மழையிலும் வெயிலிலும் இவளைக் கண்டு கொள்ள பூமி மறந்து விடுகிறது . பாவம் இந்த நிலா. இன்னும் வெள்ளையுடை
அணிந்து எவ்வித சமூக அங்கிகராமும் இல்லாத ஓர் இளம் கைம்பெண்ணைப் போல எந்நாளும் மெலிந்தும் மறைந்தும் வாழ்கிறது. என்று தான் இவளுக்கு முழு அங்கிகாரம் கிடைக்கப் போகிறதோ " சிந்தனையின் சீற்றத்தால் அவன் பிதற்ற ஆரம்பித்து விட்டான் சாரா .
"நீ சம்மதித்தால் நான் தயார். நான் உனக்கு முழு அங்கிகாரம் தருகிறேன் . வா.. _ இப்போதே திருமணம் செய்து கொள்ளலாம். இதோ பக்கத்தில் தான் போலிஸ்டேசன் வா. எனக்கு ஜாதி மதம் தடையில்லை வா." ....
சற்றே மெளனமானான் . "இல்லை" "இல்லை" "வேண்டாம்" "வேண்டாம்"
"நீ அங்கேயே இரு , நான் வந்து விடுகிறேன் அங்கே. எனக்குத் தான் ஜாதி மதம் தடையில்லை அனால் இங்கு அப்படியில்லை. கேள்வி கேட்பார்கள். அடிப்பார்கள். மீறினால் தண்டவாளங்கள் மட்டுமே என்னை இரு கைகளிலும் தாங்கிக் கொள்ளும் மற்றவர்கள் வேடிக்கை தான் பார்ப்பார்கள் .ஏன் என்றால் நாங்கள் எல்லோரும் தமிழர்கள் " முனகிக் கொண்டே கண்களை மூடினான் . கண்களின் ஓரம் கண்ணீர் கசிந்தது,
சமூக அவலங்கள் இன்றும் தொடர்ந்தபடி தானே உள்ளது. இரவில் இளந்தென்றல் காற்று வீசத் தொடங்கியது, இசைஞானியின் பாடலும் ஒலிக்கத் தொடங்கியது. " ஏ தென்றலே .... இனி நாளும் பாடவா ....என் வாழ்வெல்லாம் சுப மாலைச் சூடவா ...." அப்பப்பா பாட்டுக்குத் தான் எத்தனை வலிமை
பழைய நினைவத் தூண்டுவதில் என்று சற்றே கண்மூடினான்.
தோழர் | தோழர் | தோழர் | அவனை யாரோ பக்கத்திலிருந்து அழைத்தார்கள் ...
கருமை இரவில் தீடிர் குரலை கேட்டு திடுக்கிட்டே திரும்பினான்...
தொடரும் ...
( பகுதி 3 அடுத்த வாரம் திங்களன்று வெளிவரும்... இத்தொடரை பற்றிய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன, கருத்துக்களை அனுப்ப வேண்டிய முகவரி tnsocialpedia@gmail.com)
Comments
Post a Comment