காவு வாங்கும் கந்துவட்டி!!!
காவு வாங்கும் கந்துவட்டி!
என்.சுவாமிநாதன்
நன்றி : தி இந்து
வார்த்தைகளால் விவரிக்கவே முடியாத ரணம் அது. மிகக் கொடூரமான முகத்துடன் வெளியில் தெரியாமல் அரித்துக்கொண்டிருந்த கந்துவட்டியின் உக்கிரம், தாமிரபரணி பாயும் மண்ணில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. நெல்லை மாவட்டம், தென்காசி அருகில் உள்ள காசிதர்மத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்டவர். அந்தத் துயரத்திலிருந்து தனது குடும்பத்தை மீட்கப் பல முயற்சிகள் எடுத்தவர். ஆட்சியர் அலுவலகத்திலேயே பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் மனமுடைந்த அவர், தனது மனைவி சுப்புலட்சுமி, இரண்டு குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்திலேயே தீக்குளித்துவிட்டார். அவரது மனைவியும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துவிட்டனர். மரணத்துடன் போராடிக்கொண்டிருக்கிறார் இசக்கிமுத்து. இரண்டு குழந்தைகளும் கருகிச் சிதைந்த காட்சியைக் கண்ட தமிழகம் பேரதிர்ச்சியில் உறைந்து நிற்கிறது.
மீள முடியாத வலை
இசக்கிமுத்துவின் மனைவி சுப்புலெட்சுமி அதே பகுதியைச் சேர்ந்த முத்துலெட்சுமி என்பவரிடம் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் வட்டிக்குக் கடன் வாங்கியுள்ளார். இதற்கு வட்டி மட்டுமே ரூ. 2 லட்சத்து 34 ஆயிரம் கட்டியுள்ளார். இருந்தும் அசல் தொகையை கேட்டு, கடன் கொடுத்த முத்துலெட்சுமி நெருக்கியுள்ளார். ஏழைத் தொழிலாளியின் குடும்பம் வட்டி கட்டியே ஜீவன் இழந்த பின்பு என்ன இருக்கிறது? அச்சன்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், அங்கு அந்த ஏழைகளின் குரல் எடுபடவில்லை. கந்துவட்டிக்கார் களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக, புகார் கொடுத்த இசக்கிமுத்து தம்பதியினர் மிரட்டப்பட்டனர் என்கிறார்கள் உறவினர்கள்.
தமிழகத்தில் கந்துவட்டிக் கொடுமையால் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 823 பேர் தற்கொலை செய்திருப்பதாக சொல்கிறது ஒரு புள்ளிவிவரம். நெல்லை அதில் ஒரு சோறு பதம்தான். ஏன், படித்தவர்கள் அதிகமாக குமரி மாவட்டத்திலேயே கடந்த 4 ஆண்டுகளில் பத்துக்கும் அதிகமான கந்துவட்டி மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக சொல்கிறார் கந்துவட்டிக்கு எதிரான பிரச்சார இயக்கத்தின் அமைப்பாளர் ரவி. “அவசரத் தேவைக்குக் கடைசி புகலிடம்தான் கந்துவட்டிக்காரர்கள். விளிம்புநிலை மக்களுக்குக் கடன் கொடுக்க வங்கிகள் முன்வருவதில்லை. பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க வேறு வழியே இல்லாமல்தான் கந்துவட்டிக் கும்பல்களிடம் அகப்பட்டுக்கொள்கின்றனர்” என்கிறார் அவர். பணம் கொடுக்கும்போதே ஒரு மாத வட்டியைப் பிடித்தம் செய்துவிட்டுத்தான் கொடுப்பார்கள். என்னதான் மாதம் தவறாமல் வட்டி கொடுத்தாலும் ஒருபோதும் அசல் தீராது.
ஏமாற்று வேலை
அதுமட்டுமல்ல, அப்பாவிகளை ஏமாற்ற எந்த எல்லைக்கும் செல்லத் தயங்க மாட்டார்கள். மிகக் கொடூரமான, தந்திரமான வழிமுறை இது. கடன் கொடுக்கும்போதே, இரண்டு காசோலைகளை வாங்கிக்கொள்வார்கள். இரண்டிலும் கடன் வாங்குபவரின் கையெழுத்து இருக்கும். இதில் ஒன்றில் வாங்கிய தொகை நிரப்பப்பட்டும், மற்றொன்று தொகை நிரப்படாமலும் பெறப்படும். கடன் வாங்கியவர் முழுத் தொகையும் செலுத்திய பின்பு, தொகை நிரப்பிய காசோலையை மட்டும் தந்துவிட்டு, மற்றொன்று தொலைந்துவிட்டதாகச் சொல்லிவிடுவார்கள்.
“நம் கடன் முடிந்துவிட்டது என்று நிம்மதியாக இருப்பவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கும். அடுத்த சில வாரங்களில் அந்த மற்றொரு காசோலை நிரப்பப்பட்டுவிடும். அத்துடன், கடன் வாங்கிவிட்டுத் திருப்பிக் கொடுக்கவில்லை என்று வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து கதறுவார்கள் ஏழைகள். குமரியில் கந்துவட்டிக்கு விடும் 100-க்கும் மேற்பட்டோர் பட்டியலோடு எங்கள் அமைப்பு சார்பில் பலரிடம் மனு கொடுத்தோம். ஒருவழியாக வழக்கு பதியப்பட்டதே தவிர, நடவடிக்கை எதுவும் இல்லை. கடந்த 2008 மே 1-ல் குமரி மாவட்டம், தொலையாவட்டத்தைச் சேர்ந்த சிறுமேனி என்பவர் மீட்டர் வட்டிக்குக் கடன் வாங்கி கட்ட முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டார். இப்படி நிறைய கண்ணீர்க் கதைகள்” என்கிறார் ரவி.
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உள்ள காவலர் களுக்கு அந்தந்தப் பகுதியில் யார், யார் கந்துவட்டிக்கு விடுகிறார்கள் என்ற முழு விவரமும் தெரியும். ஆனால் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். சாதி, அரசியல், சில காவலர்கள் ஆதரவு இந்த மூன்றின் துணைதான் கந்துவட்டிக் கும்பலின் மையப்புள்ளி என்று குறிப்பிடுகிறார் ரவி.
இறந்தால்தான் கவனிக்கப்படுமா?
நெல்லைச் சம்பவத்துக்குப் பிறகு, கந்துவட்டி தொடர்பான விவாதங்கள் எழுந்திருக்கின்றன. ஆனால், இசக்கிமுத்து குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அத்தனை பேர் முன்னிலையில் தீக்குளித்துக்கொண்ட பின்னர்தான் கந்துவட்டி தொடர்பாக நாம் பேசவே தொடங்குகிறோம் என்றால் இதை எப்படி எடுத்துக்கொள்வது? அனிதா தற்கொலை செய்த பின்புதான் நீட் பொதுவெளியில், விவாதத் தளத்திற்கு வருகிறது. ஏன், மதுவிலக்கு பொதுவெளியில் பேசப்பட காந்தியவாதி சசிபெருமாள் உயிர் இழக்க வேண்டியிருந்தது.
சாமானியன் நம்பிக்கையை இழக்கையில் கடைசி ஆயுதமாய்க் கையில் எடுப்பதுதான் உயிராயுதம். அது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய முடிவு என்பது ஒருபக்கம் இருந்தாலும், மரணமடைந்த பின்புதான் ஒரு சமூகத் தீங்குக்கே இங்கு ஒரு விவாதம் எழுகிறது. இது மிகப் பெரிய அவலம்!
அன்பு எங்கே போனது?
இத்தனை பெரிய துயர சம்பவத்துக்குப் பிறகு கந்துவட்டிக்குக் கடன் வாங்க யாரும் நிர்ப்பந்தித்தால் புகார் அளிக்க தனி உதவி மையம், கந்துவட்டி புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறை, காவல் துறை இணைந்த தனிக் குழு என அடுக்கடுக்காய் அறிவிக்கிறார் நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி. ஆனால், இந்த நடவடிக்கைகளை முன்பே எடுத்திருந்தால் மூன்று உயிர்கள் கோரமாகப் பலியாகியிருக்காது. இத்தனைக்கும், ஏழைகளுக்கு உதவும் வகையில் ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே ‘அன்புச் சுவர்’ எனும் புதுமையான திட்டத்தைக் கொண்டுவந்தவர் ஆட்சியர் சந்தீப் நந்தூரி. பயன்படுத்தப்பட்ட உடைகள், புத்தகங்கள், காலணி, பொம்மைகள் என பழைய பொருட்களை யார் வேண்டுமானாலும் அங்கு வைக்கலாம். தேவைப்படும் ஏழைகள் அவற்றை எடுத்துக்கொள்ளலாம். பழைய பொருட்களை என்ன செய்வது எனத் தெரியாமல் குப்பைத் தொட்டிகளில் போடுகிறவர்களையும், உடைகள், காலணிகள் இல்லாமல் தடுமாறும் ஏழை மக்களையும் ஒரு புள்ளியில் இணைப்பதே இதன் நோக்கம். ஆனால், அதே அன்பும் கவனமும் கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட ஏழைகள் மீது காட்டப்பட்டிருந்தால் இந்தச் சோகம் நடந்திருக்குமா என்பதுதான் தவிர்க்கவே முடியாத கேள்வி!
- என்.சுவாமிநாதன்,
தொடர்புக்கு: swaminathan.n@thehindutamil.co.in

Comments
Post a Comment