ஒரேவருடத்தில் 16,000 மடங்கு உயர்ந்த அமித் ஷா மகன்
*ஒரேவருடத்தில் 16,000 மடங்கு உயர்ந்த அமித் ஷா மகன் நிறுவனத்தின் ஆண்டு வருமானம்*
பாஜகவின் தேசியத்தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் அமித் ஷாவுக்கு சொந்தமான நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ஒரே ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமித் ஷாவின் மகன் ஜெய் அமித் ஷாவுக்கு சொந்தமான நிறுவனம் டெம்பிள் எண்டர்பிரைசஸ். இந்த நிறுவனம் பதிவுசெய்துள்ள வருமான கணக்குகளின்படி, 2014-15 காலகட்டத்தில் ஆண்டு லாபம் 50,000 ஆக இருந்த நிறுவனத்தின் வருமானம் 2015-16 காலகட்டத்தில் 80.5 கோடியாக உயர்ந்துள்ளது. இது சுமார் 16,00,000 சதவீத வளர்ச்சியாகும்.
இந்த நிறுவனத்திற்கு 15.78 கோடி ரூபாய் பணம் பரிமல் நத்வானி என்பவரின் நிறுவனத்திடமிருந்து கடனாக கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த பரிமல் நத்வானி ஒரு சுயேட்சையான நாடாளுமன்ற உறுப்பினராவார். 2014ம் ஆண்டு மீண்டும் இவர் ராஜ்யசபா மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஜார்கண்ட்டில் உள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
மேலும், பரிமல் நத்வானிதான் குஜராத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராவார்.
இந்த 15.78 கோடி ரூபாய் பணம், எந்தவித சொத்தையும் காப்பாக கொள்ளாமல், வெறும் கடனாக கொடுக்கப்பட்டதாக அமித் ஷா மகனுடைய நிறுவனம் சார்பாக சொல்லப்படுகிறது.
ஆனால், கடன் கொடுத்ததாக சொல்லப்படும் பரிமல் நத்வானியின் நிறுவன கணக்கில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இத்தகைய கடன் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அமித் ஷா மகனுக்கு சொந்தமான இந்த குறிப்பிட்ட நிறுவனம் 2013ம் ஆண்டு 6,230 ரூபாய் இழப்பு என்றும், 2014ல் 1,724 ரூபாய் லாபம் என்றும் கணக்கு காட்டியுள்ளது.
2014-15 காலகட்டத்தில் 18,728 ரூபாய் லாபம் என்றும், 50, 000 ரூபாய் வருமானம் என்றும் தன்னுடைய வருடாந்திர கணக்கில் காட்டப்பட்டுள்ளது.
ஆனால், அடுத்த வருடமே வருமானம் 80.5 கோடி என்கிற அளவுக்கு தடாலடியாக உயர்ந்துள்ளது.
வருவாய் உயர்ந்திருக்கும் நிலையில், நட்டத்தின் காரணமாக நிறுவனம் மூடப்படுவதாக சொல்லப்பட்டு நிறுவனம் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா, குசம் பின்சர்வ் ப்ரைவேட் லிமிட்டெட் என்கிற நிறுவனத்தில் 60% பங்குகளைப் பெற்று வேறு ஒரு தொழிலைத் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் 2014-15ல் கடைசியாக கணக்கு தாக்கல் செய்துள்ளது. அதன்படி, சுமார் 24 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
இந்த நிறுவனம் சரக்கு, ஏற்றுமதி, இறக்குமதி, பங்குகள், விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகிய துறைகளில் ஈடுபடுவதாக அமித் ஷா மகனான ஜெய் ஷாவின் நிறுவன வழக்கறிஞர் தெரிவிக்கிறார். ஆனால், இந்த நிறுவனம் தன் நிறுவனத்திற்கு மின்சார உற்பத்தி துறையிலிருந்து லாபம் வந்ததாக கணக்கு காட்டியுள்ளது.
மேலும், பியூஷ் கோயல் மத்திய மின்சார துறை அமைச்சராக இருந்தபோது இந்திய மரபுசார் ஆற்றல் உற்பத்தி மேம்பாட்டுக் கழகத்திடம் இருந்து சுமார் 10.52 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது.
முன் அனுபவம் இல்லாத இந்த நிறுவனத்திற்கு எப்படி மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து இவ்வளவு பெரிய தொகை கடனாக கொடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.
அதேபோல், இந்த நிறுவனத்திற்கு 25 கோடி பணம் கலால்பூர் கோ-ஆப்ரேட்டிவ் வங்கி கடனாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியின் போர்டு இயக்குநர்களில் சிலர் அமித் ஷாவினுடைய மகன் படித்த நிர்மா பல்கலைக்கழக குழுமத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த செய்தி அனைத்தையும் ரோகினி சிங் என்ற புலனாய்வு பத்திரிக்கையாளர் வெளிக்கொண்டு வந்துள்ளார்.
இவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் வதோதராவின் நிறுவனம், டி.எல்.எப் நிறுவனத்துடன் செய்த நிலப்பரிமாற்றங்களில் நடந்த முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment