வருகிறது பிளஸ் 1 ல் மாற்றம்..
பிளஸ் 1 மதிப்பெண் முறையில் புதிய மாற்றங்கள் : அரசு உத்தரவு வெளியீடு
பிளஸ் 1 வகுப்பில் மாணவர்களின் வருகைப் பதிவுக்கும் மதிப்பெண் வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தொடர்ச்சியான கற்றலுக்கு மாணவர்களின் வருகைப்பதிவு முக்கியமானதாகும். இதைக் கருத்தில் கொண்டு, தொழிற்கல்வி செய்முறைத் தேர்வு இல்லாத பாடத்துக்கு அகமதிப்பீடு மதிப்பெண்ணாக 10 மதிப்பெண்கள் வழங்கலாம்.
அவற்றில் மாணவர்கள் வருகைப் பதிவுக்கு அதிகபட்சமாக 3 மதிப்பெண்கள் வழங்கப்படும். 85 சதவீதத்திற்கு மேல் வருகை புரிந்த மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள், 80 -85 சதவீதம் வரை வருகைப் புரிந்தவருக்கு 2 மதிப்பெண்களும், 75 - 80 சதவீதம் வரை வருகை புரிந்தவர்களுக்கு 1 மதிப்பெண்கள் வழங்கப்படும். உள்நிலைத்தேர்வில் அதிகபட்சமாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். சிறந்த ஏதேனும் 3 தேர்வுகளின் சராசரி மதிப்பெண்ணை 5 மதிப்பெண்களுக்குக் கணக்கிடப்பட்டு வழங்கப்பட வேண்டும். ஒப்படைவு, செயல் திட்டம், களப்பயணம் ஆகியவற்றில் அதிகபட்சமாக 2 மதிப்பெண்கள் அளிக்கப்பட வேண்டும்.
தொழிற்கல்வி செய்முறைப் பாடத்துக்கான அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் அதிகபட்சம் 25 வழங்கலாம். அவற்றில் மாணவர்கள் வருகைப்பதிவுக்கு அதிகபட்சமாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். 85 சதவீதத்திற்கு மேல் வருகைப் புரிந்த மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள், 80 - 85 சதவீதம் வரை வருகை புரிந்தவருக்கு 4 மதிப்பெண்களும், 75 -80 சதவீதம் வரை வருகை புரிந்தவர்களுக்கு 2 மதிப்பெண்கள் வழங்கப்படும். உள்நிலைத் தேர்வில் அதிகப்பட்சமாக 15 மதிப்பெண்கள் வழங்கப்படும். சிறந்த ஏதேனும் 3 தேர்வுகளின் சராசரி மதிப்பெண்ணை 15 மதிப்பெண்களுக்குக் கணக்கிடப்பட்டு வழங்கப்பட வேண்டும். ஒப்படைவு, செயல்திட்டம், களப்பயணம் ஆகியவற்றில் அதிகப்பட்சமாக 5 மதிப்பெண்கள் அளிக்கப்பட வேண்டும்.
வினாத்தாள் வடிவமைப்பு: வினாத்தாள் வடிவமைப்பினைப் பொருத்தவரையில், உயிரியல் பாடத்தில் (தாவரவியல், விலங்கியல்) ஆகிய 2 பாடத்துக்கு தலா 35 மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளது. அதில் ஒரு மதிப்பெண் வினாக்கள் 8, இரு மதிப்பெண் வினாக்கள் 4, மூன்று மதிப்பெண் வினாக்கள் 3, ஐந்து மதிப்பெண் வினாக்கள் 2 என கேட்கப்பட வேண்டும். வினாத்தாள் வடிவமைப்பு தொழிற்கல்விக்கு ஒரு மதிப்பெண்ணில் 15-ம், மூன்று குறுவினாக்கள் மதிப்பெண்ணில் 10-ம், சிறுவினாக்கள் 5 மதிப்பெண்ணுக்கு 5-ம், பெருவினாக்கள் 10 மதிப்பெண்ணுக்கு 2-ம் என 90 மதிப்பெண்ணிற்கு கேட்கப்பட உள்ளது. செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களுக்கு ஒரு மதிப்பெண்ணில் 20 கேள்வியும், குறுவினாக்களுக்கு 2 மதிப்பெண்ணில் 7 கேள்வியும், சிறு வினாக்களுக்கு 3 மதிப்பெண்ணில் 7 கேள்வியும், பெரு வினாக்கள் 5 மதிப்பெண்ணில் 7 கேள்வியும் என 90 மதிப்பெண்ணிற்கு வினாக்கள் இடம் பெறும். செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களுக்கு ஒரு மதிப்பெண்ணில் 15 கேள்வியும், குறுவினாக்களுக்கு 2 மதிப்பெண்ணில் 6 கேள்வியும், சிறு வினாக்களுக்கு 3 மதிப்பெண்ணில் 6 கேள்வியும், பெரு வினாக்கள் 5 மதிப்பெண்ணில் 5 கேள்விகளும் என 70 மதிப்பெண்ணிற்கு கேள்விகள் இடம் பெறும். கற்றலின் நோக்களை மதிப்பெண்களாக அறிந்து கொள்வதற்கு 30 சதவீதமும், புரிந்து கொள்வதற்காக 40 சதவீதமும், பயன்படுத்துதல் 20 சதவீதமும், திறனடைதல், படைப்பாற்றல் 10 சதவீதமும் அளிக்கப்படும். ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண், 3 மதிப்பெண், 5 மதிப்பெண் வினாக்கள் என ஒவ்வொரு பிரிவிலும் வினாக்கள் வடிவமைக்கப்படும்போது கற்றல் நோக்கங்களுக்காக ஒதுக்கீட்டு செய்யப்பட்டுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில், ஒவ்வொரு பிரிவிலும் வினாக்கள் இடம் பெறும் வகையில் வினாத்தாள் வடிவமைக்கப்பட வேண்டும் என்று தனது உத்தரவில் உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment