சாம்பியன்ஸ் டிராபி - அரையிறுதி இந்தியா vs பங்களாதேஷ்
இன்று நடைபெறும் அரையிறுதி - வெல்லுமா இந்திய அணி
கடந்த 2007ல் வெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பை தொடரில் வங்கதேச அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. இரு அணிகளும் 'பி' பிரிவில் இடம்பெற்றிருந்தது. இந்திய அணி முதல் லீக் போட்டியில் வங்கதேசத்தை சந்தித்தது. இதில் கங்குலி (66), யுவராஜ் சிங் (47) ஓரளவு கைகொடுக்க, இந்திய அணி 191 ரன்கள் எடுத்தது.
இதை விரட்டிய வங்கதேச அணிக்கு தமிம் (51), சாகிப் (53) முஷ்பிகுர் (56*) அரை சதம் கடக்க, 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால், முதல் சுற்றுடன் நடையைக் கட்டியது.
இந்தியாவுக்கு வெற்றி
இங்கிலாந்தில் 2009ல் 'டுவென்டி-20' உலக கோப்பை நடந்தது. இதன் லீக் போட்டியில் இந்தியா, வங்கதேசத்தை சந்தித்தது. காம்பிர் (50), யுவராஜ் (41) விளாச, இந்திய அணி 180 ரன்கள் எடுத்தது. இதை 'சேஸ்' செய்த வங்கதேச அணிக்கு பிரக்யான் ஓஜா 'சுழலில்' தொல்லை தர, 20 ஓவரில் 155 ரன்கள் மட்டும் எடுக்க, 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
பழிதீர்த்தது இந்தியா
2011ல் உலக கோப்பை தொடர் இந்தியாவில் அரங்கேறியது. இதன் 'பி' பிரிவு முதல் லீக் போட்டியில் இரு அணிகளும் மோதின. சொந்த மண்ணில் மிரட்டிய சேவக் (175), கோஹ்லி (100) சதம் விளாச, இந்திய அணி 50 ஓவரில் 370 ரன்கள் குவித்தது.
இமாலய இலக்கை விரட்டிய வங்கதேச அணி முனாப் படேல் 'வேகத்தில்' (4 விக்.,) சிதற, 283 ரன்களுக்கு சுருண்டு, 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இந்திய அணியும், முந்தைய உலக கோப்பை தொடர் (2007) தோல்விக்கு பழிதீர்த்தது.
சொந்த மண்ணில் பதிலடி
2014 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் வங்கதேச மண்ணில் நடந்தது. இதில் 'சூப்பர்-10' பிரிவில் நடந்த லீக் போட்டியில் இரு அணிகளும் சந்தித்தன. முதலில் விளையாடிய வங்கதேச அணிக்கு அனாமுல் ஹத் (44) மட்டும் ஆறுதல் தர 20 ஓவரில் 138 ரன்கள் எடுத்தது. எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு, ரோகித் (56), கோஹ்லி (57) சரவெடியாய் வெடிக்க 141 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சொந்த மண்ணில் வங்கதேசத்திற்கு பதிலடி தந்தது.
வாகை சூடியது இந்தியா
கடந்த 2015ல் உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் நடந்தது. இம்முறை காலிறுதியில் இரு அணிகளும் மோதின. ரோகித் சர்மா விஸ்வரூபம் எடுக்க (137 ரன்) இந்திய அணி 302 ரன்கள் எடுத்தது. பின், விளையாடிய வங்கதேச அணி உமேஷ் 'வேகத்தில்' சிக்க, 193 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி, 109 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
'திரில்' வெற்றி
கடந்த ஆண்டு இந்திய மண்ணில் 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடந்தது. இதன் இரண்டாவது பிரிவில் இரு அணிகளும் இடம்பெற்றிருந்தன. இதில் வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு என்ற நிலையில் இந்தியா களம் கண்டது. முதலில் விளையாடிய இந்திய அணி 146 ரன்கள் எடுத்தது.
வங்கதேச அணிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. இதில் ஹர்திக் பாண்ட்யா இரண்டு விக்கெட் வீழ்த்த, கடைசி பந்தில் வங்கதேச அணி வெற்றிக்கு 2 ரன் தேவைப்பட்டது. துடிப்பாக செயல்பட்ட தோனி 'ரன்-அவுட்' செய்ய, இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றது.
Comments
Post a Comment