மகாகவி பாரதி அவதரித்த தினம் இன்று டிசம்பர் 11
பொய்யோ?மெய்யோ? | ||
நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம் சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,நீங்க ளெல்லாம் அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,நீங்களெல்லாம் கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ? போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால் நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ? கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும் கோலமும் பொய்களோ?-அங்குக் குணங்களும் பொய்களோ? சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால், சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ? காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ? வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ? காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லை காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம். |
Comments
Post a Comment