ஓம் நமோ நாராயணா - புரட்டாசி ஸ்பெஷல்
ஓம் நமோ நாராயணா
கோவிந்தா கோவிந்தா
சதா சர்வ காலமும் ‘ஓம் நமோ நாராயணாய’ என்று சொல்லி வரும் நாரத மகரிஷிக்கு, இப்படி எந்நேரமும் நாராயணின் நாமத்தை உச்சரிப்பதால் என்ன பயன்?” என்ற சந்தேகம் வந்து விட்டது. நேராக வைகுண்டம் செல்லும் அவர், அங்கு துயில் கொண்டிருந்த பரந்தாமனை பலவாறாக சேவித்துவிட்டு, “அச்சுதா.. சதா சர்வ காலமும் உன் நாமத்தையே கூறிக்கொண்டிருக்கிறேன். இதனால் ஏதேனும் பயன் உண்டா என்று எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. தேவரீர் தான் அதை தீர்த்து வைக்க வேண்டும்!” என்றார்.
சிறியதாக புன்முறவல் புரிந்த நாராயணன், “நாரதா இதை அனுபவப்பூர்வமாக உனக்கு விளக்க சிறிது காலம் தேவைப்படும். அதுவரை நீ நான் சொல்வதை தட்டாது கேட்கவேண்டும். பொறுமையாக இருக்கவேண்டும். பரவாயில்லையா?” என்கிறார்.
நாராயண நாமத்தை உச்சரிப்பதால் ஏற்படும் பயனை தெரிந்து கொள்ளவேண்டும் என்கிற ஆர்வம் இருப்பதால்… “அதனால் என்ன பிரபு… எப்படியோ எனக்கு உன் நாமத்தை உச்சரிப்பதால் ஏற்படும் பலன் பற்றி தெரிந்தால் போதும்!” என்கிறார்.
“சரி…நீ நேராக பூலோகம் சென்று அங்கு ஒரு சிறிய புல்லிடம் என் நாமத்தை கூறு. உனக்கே புரியும்” என்கிறார் பரமாத்மா.
நேராக பூலோகம் வரும் நாரதர், ஒரு நந்தவனத்தில் அப்போது தான் முளைத்த ஒரு சிறிய புல்லிடம் சென்று ‘ஓம் நமோ நாராயணாய’ என்கிறார். அடுத்த கணம் அந்த புல் கருகி கீழே சாய்ந்து விடுகிறது. அதிர்ச்சி அடையும் நாரதர் நேராக திரும்பவும் வைகுண்டம் வருகிறார்.
“என்ன பிரபோ உங்கள் நாமத்தை சொல்வதால் ஏதோ அதிசயம் நடக்கும் என்று நினைத்தால் தளிர் போல இருந்த புல்லும் கருகிவிட்டதே… இது தானா உன் நாமத்தின் மகிமை…?”
மறுபடியும் பகவான் தனக்கேயுரிய சிரிப்பை உதிர்க்கிறார்.
“சரி… அது போகட்டும் நாரதா… இம்முறை நீ பூலோகம் சென்று ஒரு புழுவிடம் என் நாமத்தை சொல்” என்கிறார்.
நாரதரும் பூலோகம் வந்து அப்போது தான் கூட்டிலிருந்து வெளியே வந்து மெதுவாக ஊரத் துவங்கிய புழு ஒன்றிடம் ‘ஓம் நமோ நாராயணாய’ என்கிறார். என்ன கொடுமை, அடுத்த கணம் அந்த புழு துடிதுடித்து இறக்கிறது.
[box size=”large” style=”rounded” border=”full”]நாரதரும் பூலோகம் வந்து அப்போது தான் கூட்டிலிருந்து வெளியே வந்து மெதுவாக ஊரத் துவங்கிய புழு ஒன்றிடம் ‘ஓம் நமோ நாராயணாய’ என்கிறார். என்ன கொடுமை, அடுத்த கணம் அந்த புழு துடிதுடித்து இறக்கிறது.[/box]
நாரதருக்கு இம்முறை சற்று அச்சம் ஏற்படுகிறது. மீண்டும் வைகுண்டம் ஓடிவருகிறார்.
“பரந்தாமா? என்ன இது அக்கிரமம்… உன் பெயரை சொன்னவுடன் அந்த புழு எழுந்து பறக்குமல்லவா என்று நினைத்தேன். மாறாக புல்லை போல அதுவும் மரணித்துவிட்டது. இது தானா உன் நாமத்தின் பெருமை? எனக்கே சற்று சந்தேகமாக இருக்கிறது” என்று குமுறுகிறார்.
“அப்படியா? எதற்கும் வேறொரு ஜீவனிடம் இன்னொரு முறை முயற்சித்து பாரேன்….” என்று கூறும் பகவான் அடுத்து அப்போது தான் முட்டையிலிருந்து பொரிந்து வெளியே வந்த ஒரு குருவிக்குஞ்சிடம் சென்று தன் நாமத்தை கூறுமாறு பணிக்கிறார். நாரதரும் அவ்வாறே செய்கிறார். குருவிக் குஞ்சும் உயிரை விட்டுவிடுகிறது.
அடுத்து ஒரு கன்றுக்குட்டி. கன்றுக்குட்டிக்கும் அதே கதி தான்.
இப்படியாக புல், புழு, பறவை, விலங்கு என்று ஒவ்வொன்றாக பார்த்து இறைவனின் கட்டளைப்படி நாராயண மந்திரத்தை கூறுகிறார் நாரதர். சொல்லி வைத்தார் போல அனைத்தும் உடனே மரணத்தை தழுவுகின்றன. நாராயண நாமத்தை சொல்கிறோம் என்ற நினைப்பில் ஒவ்வொரு உயிராக நாம் கொன்றுகுவிக்கிறோமே என்கிற பீதி ஏற்படுகிறது நாரதருக்கு.
இம்முறை பகவானிடம் சண்டைக்கே போய்விடுகிறார். “நாராயணா போதும் உன் விளையாட்டு. உன்னால் பல உயிர்களை இதுவரை கொன்றுவிட்டேன். அந்த பாவம் என்னை சும்மா விடாது. இப்போது உன் நாமத்தை உச்சரிப்பது குறித்து எனக்கே சற்று தயக்கமாக இருக்கிறது!” என்கிறார்.
“நாரதா எதற்கும் கடைசியாக ஒரே ஒரு முறை எனக்காக பூலோகத்தில் விதர்ப்ப நாட்டு மன்னனுக்கு இன்று பிறந்திருக்கும் குழந்தையிடம் சொல்லிப் பாரேன்….” என்கிறார்.
நாரதர் அலறியடித்துக்கொண்டு…. “ஐயோ… வேண்டாம் பிரபோ. இதுவரை நான் கூறியதெல்லாம் விலங்குகள். ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால் இப்பொழுதோ ராஜகுமாரன். குழந்தைக்கு ஏதாவது என்றால் மன்னன் என்னை சும்மா விடுவானா ? கொன்றே விடுவான்…. நான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு… என்னை விட்டுவிடேன்…” என்று கெஞ்சுகிறார்.
[box size=”large” style=”rounded” border=”full”]”ஐயோ… வேண்டாம் பிரபோ. இதுவரை நான் கூறியதெல்லாம் விலங்குகள். ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால் இப்பொழுதோ ராஜகுமாரன். குழந்தைக்கு ஏதாவது என்றால் மன்னன் என்னை சும்மா விடுவானா ? கொன்றே விடுவான்…. நான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு… என்னை விட்டுவிடேன்…” [/box]
“நாரதா நிபந்தைனையை மீறினால் எப்படி… சொல்வதை கேட்டு பொறுமையாக இருப்பேன் என்றல்லவா கூறினாய்…?” என்கிறார் பகவான்.
சற்று யோசிக்கும் நாரதர்… “சரி… பூலோகம் சென்று அந்த குழந்தையிடம் உன் நாமத்தை சொல்கிறேன். ஆனால் என் உயிருக்கு ஏதாவது ஆபத்து என்றால் நீ தான் என்னை காப்பாற்ற வேண்டும். அதற்கு ஒப்புக்கொண்டால் நீ கூறியதற்கு நான் ஒப்புக்கொள்கிறேன்”
“சரி…” என்று பகவான் கூற நாரதர் விதர்ப்ப நாட்டிற்கு விரைகிறார்.
நாரதரை பலவாறாக துதித்து வரவேற்கிறான் மன்னன். குழந்தையை பார்க்கவேண்டும் என்று நாரதர் கூற, அந்தப்புறத்திற்கு அழைத்துச் செல்கிறான். அங்கு மன்னனுக்கு புதியதாக பிறந்த அந்த குழந்தையின் காதில் சென்று ‘நாராயணா! நாராயணா! நாராயணா!’ என்று கூறுகிறார் நாரதர்.
உடனே அங்கு அனைவரும் ஆச்சரியப்படும்படி அந்த குழந்தை வாய் திறந்து நாரதருக்கு நன்றி கூறி நாராயணனின் பெருமையை பேச ஆரம்பிக்கிறது . அந்த அதிசயத்தை கண்ட யாவரும் வியந்தனர்.
அக்குழந்தை கூறியதாவது…. “நாரத மகரிஷியே! உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. நான் போன பல பிறவிகளில் புழுவாகவும் பூச்சியாகவும் மற்ற ஜந்துக்களாகவும் பிறந்து அல்லல்பட்டு கொண்டிருந்தேன். எனது அதிர்ஷ்டம் நீர் எனது போன எல்லா பிறவிகளிலும் உடனே வந்து நாராயணனின் நாமத்தைக் கூறியதால் இம்மனிதப் பிறவியை அதுவும் ஒரு ராஜகுமாரனாக இந்த பிறவியை மிக விரைவில் அடைந்தேன். அது மட்டுமல்ல பிறந்தவுடனே பேசும் சக்தியையும் பெற்றுவிட்டேன். நாராயண நாமம் இல்லை என்றால் ஒவ்வொரு பிறவியிலும் பல காலம் உழன்று அல்லல்பட்டு அவஸ்தைப்பட்டிருப்பேன். எனக்கு ஸ்ரீமன் நாராயணனை அடைய வழிகாட்டியதற்கு நன்றி’ என்று அக்குழந்தை கூறியது.
நாராயண நாமத்தின் மகிமையை தவறாக புரிந்துகொண்டமைக்காக வெட்கப்பட்ட நாரதர் இறைவனின் கருணையை பின்னர் எண்ணி கண்ணீர் வடித்தார். ‘நாராயணா! என்னே உன் நாமத்தின் மகிமை!’ என வியந்து மகிழ்ந்தார்.
ஒரு புழுவே நாராயண நாமம் கேட்டு இத்தனை மேன்மை அடைந்திருக்கிறது என்றால், மனிதப் பிறவியில் நாம் அந்த நாமம் மூலம் சாதித்துக் கொள்ளக்கூடியவைகளை எண்ணிப் பாருங்கள். அதை நான் ஒரு பதிவில் கூறமுடியுமா? நூறு பிறவிகள் எடுத்தாலும் அதற்கு போதாதே…
இதைத் தான் ஆதி சங்கரரும் சொல்கிறார்..
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
கோவிந்தம் பஜ மூடமதே
இறைவனின் நாமத்தை எத்தனை முறை உச்சரித்தாலும் சரி….ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும் பலன் உண்டு. எனவே நமது பிரார்த்தனை என்றும் உதடுகள் மூலமல்லாமல் உள்ளத்தின் மூலம் இருக்கட்டும்.
பகவானின் நாமஸ்மரனையும் சரி… உங்கள் பிரார்த்தனையும் சரி…. என்றுமே வீண் போகாது!
Comments
Post a Comment