விகடன் விமர்சனம் - தாரை தப்பட்டை
தாரை தப்பட்டை விமர்சனம்
ஒரு நல்ல சினிமா பார்வையாளனுக்குள் ஏதேனும் ஒரு உணர்வைக் கடத்தும். சோகம், சந்தோஷம், உற்சாகம், காதல்.. இப்படி ஏதோ ஒன்றை. முந்தைய பாலா படங்கள் அப்படியான சில உணர்வுகளை மிக அடர்த்தியாகவே கடத்தியிருக்கிறது. அதுவும் போக சில உண்மைகளையும் அவை முகத்தில் அறைந்திருக்கின்றன. அது சமயங்களில் வலிக்கவும் செய்யும். அந்த வலி, வலி கொடுத்தவர் மீது கோபமாக வெளிப்படலாம். ’தாரை தப்பட்டை’யில் அப்படியான வலி இருக்கிறதா?
தஞ்சாவூரில், கலைமாமணி விருது பாரம்பரிய பெருமை கொண்ட ஜி.எம்.குமாரின் மகன் சசிக்குமார். தவிலிசைக் கலைஞரான தந்தையின் அந்தக் கால இசைஞானம் இந்த காலகட்டத்தில் கல்லா கட்டாது என்று வரலட்சுமியை நட்சத்திர ஆட்டக்காரியாகக் கொண்ட தாரை தப்பட்டைக் குழு ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார் சசி. வரலட்சுமிக்கு சசி மீது அத்த்த்த்த்த்த்தனை காதல். ஒருகட்டத்தில் ’என் மவ எத்தனை நாள்தான் ஆட்டக்காரியா இருப்பா’ என்று ஆதங்கப்படும் வருவின் அம்மா, தன் மகளை விடாப்பிடியாக பெண் கேட்டு வந்த ஆர்.கே.சுரேஷுக்கு அவளைக் கட்டிவைக்க சசியின் உதவியை நாடுகிறார். அரசு வேலையில் இருக்கும் சுரேஷைக் கட்டிக் கொண்டால், வரலட்சுமிக்கு நல்ல வாழ்க்கை அமையும் என்று தன் காதலைப் புதைத்து, அந்தத் திருமணத்தை நடத்த உதவி செய்கிறார் சசி.
திருமணமான முதல் நாள் விடியலே வரலட்சுமிக்கு அதிர்ச்சியுடன் விடிகிறது. அதோடு அவள் காணாமலும் போகிறாள். பல மாதங்களாக மகளைக் காணாத வரலட்சுமியின் அம்மா, சசியிடம் புலம்புகிறார். வரலட்சுமிக்கு என்ன ஆனது என்று தேடிப்போகிற சசி அவளை எந்தச் சூழலில் சந்திக்கிறார், வரலட்சுமியின் கதி என்ன ஆனது என்பது வழக்கமான பாலா பட க்ளைமேக்ஸ்.
சன்னாசியாய் சசி.ஆனால் படத்தின் சூறாவளி – வரலட்சுமிதான். ’நீ இதைதானே உத்து உத்து பார்ப்ப’ என சசியை கிறுகிறுக்க வைப்பதிலும் மேக்கப் போடும் சசியை சைட் அடிக்கும் குறும்பிலும் ‘அக்காங் மாமா.... அக்க்க்க்காங் மாமா’ என ராகம் போடுவதிலும் தன் கல்யாண பேச்சு எடுக்கும் சசி முதுகில் போடுவதுமாக... தெறி! உடலை விடைத்து வெடித்து மடக்கி டவுசர் தெரிய ஆடுவதெல்லாம் கெட்ட ஆட்டம். இது எல்லாத்தையும் தூக்கியடிக்கிறது அழகி மாமனாருடன் சரக்கடிக்கும் சங்கமத் தருணங்கள். ‘அடேய்.... பெரிய மனுஷன்னு சமமா உக்கார வைச்சு குடிச்சா...’ என அந்த சமயம் ’ஆல்கஹாலின் ஆணைக்கிணங்க’ வரலட்சுமி அடிப்பதெல்லாம் சரவெடி அதிரடி! அதே, நீதானே எனக்கு சாமி’ என்று மாமனிடம் உணர்ச்சி பொங்கச் சொன்னபிறகு, நடிப்பில் வேறொரு பரிமாணம். அட்டகாசம் வரூ!
வரலட்சுமியைப் பற்றி அடுக்க இவ்வளவு இருக்க, சசியைப் பற்றி என்ன சொல்ல? குடுமி கேசம், அடர் தாடிகளுக்கு நடுவே மூர்க்கமும் தீர்க்கமுமாக வெறிக்கிறது கண்கள். பொருமிப் பொருமி பின்னர் பொங்குகிறார். வில்லன் சுரேஷ்...அதகளம்! வெள்ளை வேட்டி-சட்டை, குளிர் கண்ணாடி, குரூர பார்வை என உறைய வைக்கிறார். ஆனால், இடையிடையே செய்யும் காமெடி...அச்சுபிச்சு! ஜி.ஆர்.குமாருக்கும் பாலாவுக்கும் என்ன கெமிஸ்ட்ரியோ..! பாலா அவருக்கு வெயிட் ரோல் கொடுக்க, அதில் கெத்து காட்டுகிறார் மனிதர். அமுதவாணன் பின்பாதியில் கலகலக்க வைத்தாலும், படத்தின் நருக் சுருக் காமெடிகளை வரலட்சுமி கதாபாத்திரமே பேசிவிடுகிறது. ’தாய்பாசம்...’ என்ற வரலட்சுமியின் நக்கலிலும், மூடியில் சரக்கை ’ஊற்றி’க் கொடுத்துவிட்டு, ’நீயே கொடுடா... இந்தப் பாவத்துக்கு நான் ஆளாக மாட்டேன்..!’ எனும் சலம்பலிலும்... பாலா பன்ச்! இடைவேளைக்கு முன்பு வரை, பாட்டும் கலகலப்புமாய் கலகலா மோடில் பயணிக்கும் படம், இன்டர்வெல் ப்ளாக்கிலேயே ‘பாலா மோடு’க்கு மாறுகிறது. இடைவேளைக்கு பிறகு, சூறாவளி இல்லாததால் பொலிவிழக்கும் சசிக்குமார் தன் குழுவுக்காக வேறு ஆட்டக்காரி தேடி அலையும் கா.... ட்.... சி.... க... கள்...... ஆவ்வ்வ்வ்..!
இளையராஜாவின் 1000-மாவது படம். பாடல்களில் கொடி கட்டும் ராஜா, பின்னணி இசையில் அவ்வளவாய்ப் பாய்ச்சல் காட்டவில்லை என்பதும் உண்மை. நலிந்து மெலிந்து ஒழிந்து கொண்டிருக்கும் தப்பாட்டக் கலைஞர்களின் வாழ்க்கை மீது வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது படம். பாரம்பரிய பெருமை விட்டுக் கொடுக்காத ஜி.எம்.குமார், பிழைப்புக்காக ஜனரஞ்சகமாக ஆடிப்பாடும் சசி, கச்சையும் கொச்சையுமாக மாறிப் போன தற்போதைய நிலை என ஆட்டக் கலைஞர்கள் எதிர்கொள்ளும் நிதர்சனத்தைப் புரிய வைக்கிறது. ஆனாலும் வீரியமாக நெஞ்சில் ஈட்டி பாய்ச்சும் பாதிப்புகள் இல்லை. பின்பாதியில் பாலியல் தொழிலாளிகள், அவர்களை வைத்துப் பிழைக்கும் கும்பல் என அதுவும் அழுத்தமில்லாமல் கடக்கிறது.
அந்தமான் காட்சிகள் ஏன், இடைவேளை ட்விஸ்ட் என்னவென்று சொல்லாமல் மூன்று பாடல்களால் பொழுதை ஓட்டுவது ஏன், கோடிகள் கொட்டும் புராஜெக்ட்டுக்கு ஒரு அரசாங்க மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்தது ஏன்... இப்படிப் பல ‘ஏன்’கள்? ‘பிதாமகன்’ நண்பர்களோ, ‘நான் கடவுள்’ பிச்சை மாஃபியா பின்னணியோ, ‘பரதேசி’ எஸ்டேட் எதேச்சதிகாரமோ... ரத்தச் சகதி முடிவுக்கு அழுத்தமான நியாயம் கற்பித்தது. ஆனால், ‘தாரை தப்பட்டை’ க்ளைமாக்ஸுக்கு அப்படியான அழுத்தப் பின்னணி இல்லாதது, வலிந்து திணிக்கும் வன்முறை ஏன் என்ற கேள்வியை உண்டாக்குகிறது.
ஆனாலும், சோகத்தையும் ஒரு கலைவடிவமாகக் கடத்தும் தன் இயல்பை விட்டுக் கொடுக்கவில்லை பாலா. சென்சார் கார்ட் முதல் எண்ட் கார்ட் வரை பக்கா பாலா படம். அது ப்ளஸ்ஸா...மைனஸா என்பது... அவரவர் அபிமானம். முன்னர் காமாசோமா தமிழ் சினிமா டிரெண்டை ‘பாலா படங்கள்’ அடித்து உடைத்தன. இனி ‘பாலா டிரெண்டை’ பாலா படமே உடைக்க வேண்டியதுதான் இயக்குநரின் சவால்!
Comments
Post a Comment