தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு
செயற்கைக்கோள் படம் | படம் உதவி: இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளம்.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பசிபிக் பெருங்கடலின் கடல்பரப்பு வெப்பநிலையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. இது ‘எல்நினோ’ எனப்படுகிறது. சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்ததற்கு இதுவும் ஒருவகையில் காரணமாக இருக்கலாம் என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்தாலும், எல்நினோ பாதிப்பு காரணமாக, ஏப்ரல் வரைகூட மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறினர்.
இந்நிலையில், வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது தவிர, குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு, லட்சத்தீவுகள் இடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
21-ம் தேதி அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 22 செ.மீ. மழை பதிவானது. நேற்று முன்தினம் சென்னை உட்பட தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை பகுதியில் 3 செ.மீ., நீலகிரி மாவட்டம் குன்னூரில் 2 செ.மீ. பதிவானது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment