DTCP என்றால் என்ன?
டீ.டி.சி.பி (.DDCP) அங்கீகாரத்தின் அவசியம்
🍒இன்று கிராமங்களில் எல்லாம் விளை நிலங்கள் மனைகளாகின்றன. குறைவான விலை என்பதால் மக்களும் புறநகர்ப் பகுதிகளிலும் கிராமப் பகுதிகளிலும்கூட வீட்டு மனைகளை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படி அந்த மனைகளை வாங்கும்போது டீ.டி.சி.பி. அங்கீகாரம் பெற்ற மனை என்றும் புரோமோட்டர்கள் விளம்பரப்படுத்துவார்கள். டீ.டி.சி.பி. என்பது என்ன? இதன் பணி என்ன? டீ.டி.சி.பி.யின் அங்கீகாரத்தை எங்கெல்லாம் வீடோ, மனையோ வாங்குபவர்கள் கவனிக்க வேண்டும்?
🍇டீ.டி.சி.பி. என்பது...
டீ.டி.சி.பி. என்பது டைரக்டரேட் ஆஃ டவுன் அண்ட் கன்ட்ரி பிளானிங் என்பதன் சுருக்கம். அதாவது நகர ஊரமைப்பு இயக்ககம். நிலத்தில் போடப்படும் லே-அவுட்களுக்கு அங்கீகாரம் அளிப்பது, விளை நிலங்களை மனையாக மாற்றுவது, அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்கு அனுமதி அளிப்பது ஆகிய பணிகளை இந்த டீ.டி.சி.பி. அமைப்பு செய்கிறது. சென்னையில் மட்டும் டீ.டி.சி.பி.க்கு வேலை இல்லை. இங்கே அந்த வேலையை சி.எம்.டி.ஏ. எனப்படும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் செய்கிறது. சி.எம்.டி.ஏ.வின் அதிகார வரம்பு என்பது சென்னை மாவட்டம் முழுவதும் வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் சென்னையின் எல்லை வருவதால் அங்கேயும் சி.எம்.டி.ஏ.வுக்குத்தான் வேலை. இந்தப் பகுதிகள் தவிரத் தமிழகத்தின் மற்ற எல்லாப் பகுதிகளுமே டீ.டி.சி.பி. அதிகார வரம்பில்தான் வருகின்றன.
🍇லே-அவுட் கவனம்
🍇தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் டீ.டி.சி.பி.யின் கீழ் வருவதால் இதன் அங்கீகாரத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். புரோமோட்டர்கள் ஒரு நிலத்தைப் பிரித்து அதில் லே-அவுட் போட்டு விற்கிறார்கள் என்றால் அந்த லே-அவுட்டுக்கு டீ.டி.சி.பி.யின் அங்கீகாரமும் அனுமதியும் மிகவும் அவசியம். கிராமங்களிலோ அல்லது புறநகர்ப் பகுதிகளிலோ லே-அவுட் போட்டு விற்பனை செய்யப்படும் மனையை வாங்குவதாக வைத்துக்கொள்வோம். அந்த லே-அவுட்டுக்கு டீ.டி.சி.பி.யின் அங்கீகாரம் இருக்கிறதா என்பதை ஆவணங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும். வாய் வார்த்தையாகச் சொல்வதையெல்லாம் நம்பக் கூடாது.
🍇இதேபோல நீங்கள் வாங்க உத்தேசித்துள்ள மனை எவ்வளவு ஏக்கரில் இருக்கிறது என்பதையும் முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு வேளை லே-அவுட்டுக்கு அங்கீகாரம் வாங்க வேண்டிய பகுதி பத்து ஏக்கருக்குக் குறைவாக இருக்குமானால், நிலம் எந்த மாவட்ட எல்லையில் வருகிறதோ அந்த மாவட்டத்தில் உள்ள டீ.டி.சி.பி. அலுவலகத்தின் அனுமதி போதுமானது. லே-அவுட் போடப்பட்டுள்ள மனைகள் பத்து ஏக்கருக்கு மேல் இருந்தால், மாவட்ட அலுவலகத்தின் அனுமதி மட்டுமல்ல, சென்னை அண்ணா சாலையில் செயல்பட்டு வரும் டீ.டி.சி.பி. தலைமை அலுவலகத்திலும் அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதி பெறப்பட்டிருக்கிறதா என்பதையும் மனை வாங்குபவர்கள் கவனிக்க வேண்டும்.
🍇பின்பற்றப்படும் விதிமுறைகள்
லே-அவுட்டுகளில் உள்ள சில விஷயங்களை மனை வாங்குபவர்கள் ஆராய வேண்டும். லே-அவுட்டில் சாலை, பூங்கா, பொது இடம் என இடங்களைப் பிரித்துக் காட்ட வேண்டும். இதைப் புரோமோட்டர்களே பிரித்துக் காட்டியிருப்பார்கள். ஒரு வேளை அவர்கள் பிரித்துக் காட்டவில்லை என்றாலும், பஞ்சாயத்து அலுவலகத்தில் லே-அவுட் சமர்ப்பிக்கப்படும் போது, அந்த லே-அவுட் மாவட்ட டீ.டி.சி.பி. அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
அப்போது அவர்கள் மேற்கூறிய இடங்களைக் குறிப்பிட்டு லே-அவுட்டுக்கு அங்கீகாரம் அளிப்பார்கள். சில சமயங்களில் புதிதாக டீ.டி.சி.பி. அதிகாரிகளே அதற்குத் தகுந்தாற்போல லே-அவுட் போட்டுக் கொடுப்பதும் உண்டு. இந்த லே-அவுட்டைத்தான் புரொமோட்டர்கள் மனையை விற்கும்போது பின்பற்ற வேண்டும். அந்தத் திட்ட லே-அவுட்டில் எந்த மாற்றமும் செய்யப்பட்டிருக்கக் கூடாது. இதையும் மனை வாங்குபவர்கள் கவனிக்க வேண்டும்.
🍇பஞ்சாயத்து மனையா?
கிராமப்புறங்களில் பஞ்சாயத்து அளிக்கும் அனுமதி போதாதோ என்று உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். கிராமப்புறங்களில் 24 சென்ட்டுக்கு ( ஒரு சென்ட் என்பது 435.6 சதுர அடிக்குச் சமம்) மேல் அளவுள்ள நிலப்பகுதிக்கு லே-அவுட் போடப்பட்டால் அதற்குக் கிராமப் புரொமோட்டர்கள் அனுமதி வழங்க அதிகாரம் இல்லை.
அங்கீகாரம் மட்டுமல்ல, வேறு எவ்விதத் திட்டங்களுக்கும் அனுமதி வழங்கக் கிராமப் பஞ்சாயத்தால் முடியாது. டீ.டி.சி.பி. அனுமதியைத்தான் பெற வேண்டும். எனவே பஞ்சாயத்து அனுமதி என்று சொல்லி விற்கப்படும் மனைகளின் லே-அவுட் 24 சென்டுக்கு அதிகமாக இருக்கிறதா அல்லது குறைவாக இருக்கிறதா என்பதைப் பார்த்து மனை வாங்குவதே நல்லது.
🍇அடுக்குமாடி வீடுகளுக்கு
மனைகளுக்கு மட்டுமல்ல, டீ.டி.சி.பி. அதிகார வரம்பில் வரும் பகுதிகளில் அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டவும் டீ.டி.சி.பி. விதிமுறைகளை வகுத்துள்ளது. கட்டிடம் அமைந்துள்ள இடத்தில் உள்ள சாலையின் அகலம், நிலத்தின் அகலம், தளங்களின் பரப்பு குறியீடு, கட்டிடத்தின் அகலம் குறித்தெல்லாம் டீ.டி.சி.பி. விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டே அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கட்ட வேண்டும். இந்த விதிமுறைகளுக்கு மாறாக இருந்தால் வீடு திட்ட அனுமதியை டீ.டி.சி.பி. கொடுக்காது. எனவே அடுக்குமாடி வீடுகள் வாங்கும்போது டீ.டி.சி.பி.யின் அனுமதி விவரங்களையும் வீடு வாங்குபவர்கள் பார்க்க வேண்டும்.
🍇கிராமப்புறங்களில் 24 சென்ட்டுக்கு ( ஒரு சென்ட் என்பது 435.6 சதுர அடிக்குச் சமம்) மேல் அளவுள்ள நிலப்பகுதிக்கு லே-அவுட் போடப்பட்டால் அதற்குக் கிராமப் புரமோட்டர்கள் அனுமதி வழங்க அதிகாரம் இல்லை. அங்கீகாரம் மட்டுமல்ல, வேறு எவ்விதத் திட்டங்களுக்கும் அனுமதி வழங்கக் கிராமப் பஞ்சாயத்தால் முடியாது. டீ.டி.சி.பி. அனுமதியைத்தான் பெற வேண்டும்.
Comments
Post a Comment