வெள்ளி திரைவிமர்சனம்- தனுஷின் மாரி
வெள்ளி திரைவிமர்சனம்- தனுஷின் மாரி
. சென்னையின் திருவல்லிக்கேணி பகுதியில் குடிசை மாற்று வாரியத்தில் தனுஷ், தனது நண்பர்களான ரோபோ சங்கர், கல்லூரி வினோவுடன் சேர்ந்து பந்தய புறாக்களை வளர்த்து வருகிறார்.
அதே ஏரியாவில் தாதாவாக இருக்கும் சண்முகராஜனுக்கும் இன்னொரு ரவுடிக்கும் நீண்டகாலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில், ஒருநாள் சண்முகராஜனுக்கு எதிரான ரவுடியை தனுஷ் தீர்த்து கட்டுகிறார்.
அன்றுமுதல், தனுஷை தனது கைக்குள் போட்டுக்கொண்டு, திருவல்லிக்கேணி பகுதியையும் அவருக்கு தாரை வார்த்துக் கொடுக்கிறார் சண்முகராஜன்.
ஏரியாவுக்குள் பெரிய தாதாவாகிவிட்ட தனுஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து, ஏரியாவுக்குள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் கலாட்டா செய்கிறார். இதனால், அந்த ஏரியாவில் உள்ள அனைவரும் தனுஷை வெறுக்கிறார்கள்.
இந்நிலையில், திருவல்லிக்கேணி பகுதிக்கு புதிய சப்-இன்ஸ்பெக்டராக விஜய் யேசுதாஸ் பதவியேற்கிறார். அந்த ஏரியாவில் ரவுடித்தனம் செய்யும் தனுஷ் பற்றி, போலீஸ் ஏட்டான காளியிடம் கேட்டு அறிந்துகொள்கிறார். தனுஷ் ஒரு கொலை செய்தது உறுதி என்றாலும், அவர்தான் கொலை செய்தார் என்பதற்கும் சாட்சியும், ஆதாரமும் இல்லாததால் அவரை கைது செய்யமுடியாமல் தவிக்கிறார் விஜய் யேசுதாஸ்.
இந்நிலையில், தனுஷ் ஏரியாவுக்கு தனது அப்பா, அம்மாவுடன் குடிவருகிறார் காஜல். பேஷன் டிசைனரான காஜல், அந்த ஏரியாவிலேயே ஒரு துணிக்கடையையும் ஆரம்பிக்கிறார். தனது ஏரியாவுக்குள் தன்னுடைய அனுமதி இல்லாமல் கடையை ஆரம்பித்த காஜலுடைய கடைக்கு சென்று தனுஷ் கலாட்டா செய்கிறார். இதனால், தனுஷ் மீது காஜல் வெறுப்படைகிறார்.
ஒருகட்டத்தில் தனுஷ் அவளுடைய கடைக்கு தானும் பங்குதாரார் என்று சொன்னதும், காஜல் அதிர்ச்சியாகிறார். ஒருநாள், காஜலின் கடைக்கு பைனான்ஸ் உதவி செய்த, கோபி தான் கொடுத்த கடனை திருப்பி கொடுக்குமாறு காஜலிடம் கலாட்டா செய்கிறார். இந்த பிரச்சினையில் தனுஷ் தலையிட்டு, காஜலுக்கு உதவி செய்கிறார். அன்றிலிருந்து தனுஷ் மீது காஜலுக்கு தனி மரியாதை வருகிறது.
அதன்பின்னர் தனுஷ் பின்னாலேயே சுற்றி வருகிறார் காஜல். தன்னுடன் நெருங்கி பழகும் காஜலிடம், ஒருநாள் தனுஷ் குடித்துவிட்டு போதையில் தான் கொலை செய்ததை உளற, அதை அவள் தனது செல்போனில் பதிவு செய்து போலீசிடம் ஒப்படைக்கிறாள்.
போலீஸ், தனுஷை கைது செய்வதற்கு சரியான ஆதாரம் கிடைத்ததும் அவரை கைது செய்து ஜெயிலில் அடைக்கிறது. தனுஷ் ஜெயிலுக்குள் போனதை கண்டு அந்த ஏரியாவே பட்டாசு வெடித்து கொண்டாடுகிறது.
கடைசியில், தனுஷ் நல்லவனா? கெட்டவனா? என்பது காஜல் மற்றும் அந்த ஏரியா மக்களுக்கு புரிந்ததா? நட்புடன் பழகிய காஜல் தனுஷை போலீசில் மாட்டிவிட காரணம் என்ன? என்பதை பிற்பாதியில் விளக்கியிருக்கிறார்கள்.
தனுஷ் படம் முழுக்க கழுத்து நிறைய தங்க சங்கிலியுடனும், வேஷ்டி, கலர் சட்டையுடனும், ஒரு ரவுடிபோல் வலம் வந்திருக்கிறார். முறுக்கு மீசையும், காதோரத்தில் பெரிய கிர்தாவுடனும் பார்க்க அச்சு அசல் ரவுடியாகவே நமக்கு தெரிகிறார். அதேபோல், நடிப்பிலும் எதார்த்தம் மீறாமல் நடித்திருக்கிறார். நடனத்திலும் தனித்துவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆரம்ப பாடலில் இவர் ஆடும் நடனம் ரசிகர்களை தியேட்டர்களில் ஆட வைத்திருக்கிறது.
காஜல், படத்தில் ஒரு பேஷன் டிசைனராக அழகாக வலம் வந்திருக்கிறார். இவருடைய நடிப்பும் பிரமாதம். தமிழில் முதன்முதலாக நடிகராக அறிமுகமாகியிருக்கும் விஜய் யேசுதாஸ், வில்லத்தனம், போலீஸ் என இரண்டிலும் சம பங்குடன் நடித்து கைதட்டல் பெருகிறார். முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு இவருடைய நடிப்பு அற்புதம்.
தனுஷ் நண்பர்களாக வரும் ரோபோ சங்கரும், கல்லூரி வினோவும் படத்தின் காமெடிக்கு கியாரண்டி. படத்தில் தனுஷைவிட இவர்களுக்குத்தான் அதிக வசனங்கள் உள்ளது. தனுஷ் பேசும் ஒவ்வொரு பேச்சுக்கும் இவர்கள் கொடுக்கும் கவுண்டர் வசனங்கள் தியேட்டரில் சிரிப்பலையை வரவழைத்திருக்கிறது. மற்றபடி, படத்தில் நடித்திருக்கும் காளி, சண்முகராஜன், ‘மெட்ராஸ்’ கோபி ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
இதுவரை காதல் கதைகளை எடுத்துவந்த பாலாஜி மோகன், முதன்முதலாக ஒரு ரவுடியிசம் சார்ந்த ஒரு கதையை படமாக்கியிருக்கிறார். முதல் முயற்சியே அவருக்கு வெற்றியைக் கொடுத்திருக்கிறது.
கதையில் ரவுடியிசம் இருந்தாலும், படத்தில் பெரும்பாலான காட்சிகளில் அரிவாள், கத்தி என்று எதுவும் இல்லாமல் படமாக்கியிருப்பது சிறப்பு. இப்படத்தில் தனுஷ் பேசும் வசனங்கள் எல்லாம் ரசிகர்களை கவரும்படி வைத்திருப்பது மேலும் சிறப்பு. படம் ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்புடன் செல்கிறது.
அனிருத் இசையில் அனைத்து பாடல்களும் செம ஹிட். அவற்றை திரையில் பார்க்கும்போது இன்னும் அழகாக இருக்கிறது. பின்னணியும் இசையும் தர லோக்கலாக இருக்கிறது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவும் அருமை.
மொத்தத்தில் ‘மாரி’ கலக்கல்.
Comments
Post a Comment