எச்சரிக்கை மெர்ஸ் கோ வைரஸ்
பதிவு செய்த நாள்: ஜூன் 10,2015 22:57
எழுத்தின் அளவு:
புதுடில்லி : பன்றிக்காய்ச்சல், எபோலா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புக்களில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதுமாக வெளிவராத நிலையில், புதிதாக மெர்ஸ்-கோ வைரசும் (மிடில் ஈஸ்ட் ரெஸ்பரேட்டரி சிண்ட்ரோம் கொரோனா வைரஸ்) இந்தியாவிற்குள் நுழைய தயாராக உள்ளது. இந்த வைரஸ் ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மெர்ஸ்-கோ வைரஸ் 2012ம் ஆண்டு சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவுவது உறுதி செய்யப்படவில்லை என்றாலும், பெரும்பாலும் ஒட்டங்களிடம் இருந்து மனிதனுக்கு வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்த வைரசால் ஏற்படும் நோயை குணப்படுத்த இதுவரை மருந்து ஏதும் கண்டுபிடிக்காத நிலையில், இதுவரை 36 சதவீதம் பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. காய்ச்சல், இருமல், மூச்சு திணறல், வயிற்றுப் போக்கு ஆகியன இந்த வைரசால் ஏற்படும் அறிகுறிகள்.
மனிதனின் சுவாச மண்டலத்தை குறிவைத்து தாக்கக் கூடிய மெர்ஸ் வைரஸ் எகிப்து, ஓமன், கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலேயே அதிகம் காணப்படுகிறது. இதனால் சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் மற்றும் அரபு நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமானங்களிலும் வரும் பயணிகளை தீவிர மருத்துவ சோதனைக்கு உட்படுத்துமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதே போன்று அரபு நாடுகளிலுக்கு செல்பவர்களும், அங்கிருந்து இந்தியா வருபவர்களும் காய்ச்சல், இருமல், சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தால் அதனை விமான நிலைய மருத்துவ குழுவிடமோ அல்லது குடியேற்ற அதிகாரிகளிடமோ தகவல் தெரிவிக்க வேண்டுமென சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
பல நாடுகளில் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளிடம் இருந்து மற்றவர்களுக்கும், நோயாளியிடம் இருந்து டாக்டர்களுக்கும் வேகமாக இந்த வைரஸ் பரவி வருவதாகவும், முறையான மருத்துவ பரிசோதனை இல்லாவிட்டால் இந்த வைரசை ஆரம்ப நிலையில் கண்டறிய முடியாது எனவும், முற்றிய நிலையிலேயே இந்த நோயின் அறிகுறிகள் தெரிய வரும் எனவும் ராஜிவ் காந்தி பயோடெக்னாலஜி ஆய்வு மைய விஞ்ஞானி டாக்டர்.லிப் ஜோசப் தெரிவித்துள்ளார். உலக அளவில் இதுவரை 1244 மெர்ஸ்-கோ வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டியப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 446 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment