அனிமேஷன் படிப்பு அதிக வாய்ப்பு
அனிமேஷன் துறையில் அபரிமித வாய்ப்புகள்!
தற்போதைய நிலையில், ஒவ்வொரு மீடியா நிறுவனமும், அனிமேஷனின் ஏதேனும் ஒரு வடிவத்தைப் பயன்படுத்துகின்றன. மீடியாவின் ஆதார அம்சமாக அனிமேஷன் மாறிவருகிறது. ஒவ்வொரு விளம்பர ஏஜென்சியும், தங்களின் பார்வையாளர்களைக் கவர, அனிமேஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றன.
அனிமேஷன் துறை எதிர்கொண்டிருக்கும் பெரிய சவால் என்னவென்றால், தேவைக்கேற்ப, தகுதியான மற்றும் திறமைவாய்ந்த மனிதவளம் போதுமான அளவில் கிடைக்கப்பெறாமைதான். எனவே, இத்துறையில் தகுதியும், திறமையும் வாய்ந்த ஆட்களின் தேவை மிக அதிகம் என்பதை மாணவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இத்துறையில் சாதிப்பதற்கு தேவையான முக்கிய மூலதனம், ஒருவரின் படைப்பாக்கத் திறன்தான். தங்களது படைப்பாக்கத் திறனை, சரியான நேரத்தில், சரியான நபர்களின் முன்பாக, வெளிப்படுத்தும் சாமர்த்தியத்தையும் பெற்றிருக்க வேண்டும்.
தகுதி
இத்துறையில் நுழைய முறையான பயிற்சி தேவை. பள்ளி மேல்நிலைப் படிப்பிற்கு பிறகு, அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங் துறையில், பட்டப் படிப்பை மேற்கொள்ளலாம். பட்டப் படிப்பு தவிர, குறுகியகால டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளையும் மேற்கொள்ளலாம்; அட்வான்ஸ்டு படிப்புகளையும் படிக்கலாம்.
இந்தியாவைப் பொறுத்தளவில், பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் பள்ளி மேல்நிலைப் படிப்பை நிறைவுசெய்த மாணவர்களுக்கு, இத்துறையில் டிப்ளமோ படிப்புகளையே வழங்குகின்றன.
சில கல்வி நிறுவனங்கள், முதுநிலை டிப்ளமோ படிப்புகள் மற்றும் இதர வகையான படிப்புகளை வழங்குகின்றன. முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கு, ஒரு மாணவர், குறைந்தபட்சம் இளநிலைப் பட்டப் படிப்பு அல்லது அதற்கு இணையான 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தமிழகத்தைப் பொறுத்தளவில், மதுரை அருகேயுள்ள சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி சிறப்பான முறையில், அனிமேஷன் கல்வியை வழங்குகிறது. இங்கு 3 ஆண்டு பி.எஸ்சி., அனிமேஷன் படிப்பு வழங்கப்படுகிறது. பிளஸ் 2 படித்த மாணவர்கள் இதில் சேரலாம்.
எதிர்கால வாய்ப்புகள்
அனிமேஷன் துறையின் வளர்ச்சி புதிய உயர்வு நிலைகளை எட்டியுள்ளது. பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகரித்துவரும் தேவைகளை, இத்துறையின் நிபுணர்கள் பூர்த்திசெய்ய வேண்டியுள்ளது.
அனிமேஷன் நிபுணர், உற்பத்தி நிறுவனங்கள், விளம்பர ஏஜென்சிகள், சினிமா தயாரிப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கணினி விளையாட்டுகள், கார்ட்டூன் சேனல்கள் மற்றும் பலவிதமான வலைதளங்களில் வேலை வாய்ப்புகளை பெறலாம்.
மேலும், ‘பிரிலான்சிங்’ முறையிலும், அனிமேஷன் கல்வி நிறுவனங்களில் ஆசிரியராகவும் பணியாற்றலாம். எனவே, அனிமேஷன் துறையை படிக்கவிரும்பும் மாணவர்கள், எந்தவித தயக்கமும் இன்றி, இத்துறையில் கால் பதிக்கலாம். ஆர்வமும், உழைப்பும், படைப்புத்திறனும் இருந்தால் போதும்.
அனிமேஷன் சார்ந்த அமைப்புகள்
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு, இயங்கிவரும் The Animation Society of India (TASI), புதிய அனிமேஷன் தொழில்நுட்பங்களை கற்றுத்தருகிறது. இந்த அமைப்பு, Anifest India என்ற இந்தியாவின் மிகப்பெரிய வருடாந்திர அனிமேஷன் திருவிழாவை நடத்துகிறது.
ஏறக்குறைய ஒவ்வொரு மாதமும், அனிமேஷன் தொடர்பாக, தொழில்நுட்ப மற்றும் ஆழமான அம்சங்களைக் கொண்ட ஒர்க்ஷாப்புகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்துகிறது.
மேலும், பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட Association of Bangalore Animation Industry (ABAI) மற்றும் The Society for Animation in Delhi (SAID) ஆகிய அமைப்புகளும் குறிப்பிடத்தக்கவை.
இந்திய அனிமேஷன் துறை, அதிக திறன்வாய்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள், குறைவான உற்பத்தி செலவு ஆகிய 2 முக்கிய அம்சங்களில் பயணித்துக் கொண்டுள்ளது. இந்தியாவின் அனிமேஷன் நகரங்களாக, புனே, ஐதராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் திகழ்கின்றன
Comments
Post a Comment