உதவித்தொகையுடன் அறிவியல் படிப்பு
உதவித் தொகையுடன் அறிவியல் படிக்கலாம்
?
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களில் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களை அறிவியல் பக்கம் இழுக்கும் வகையில் ஒரு சிறப்பு அறிவியல் உதவித்தொகைத் திட்டத்தை (Kishore Vaigyanik Protsahan Yojana-KVPY) மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயல்படுத்திவருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் மூன்று பிரிவுகளில் (Stream SA, Stream SX, Stream SB) மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு மாதாமாதம் பி.எஸ்சி படிக்க ரூ.5 ஆயிரமும், எம்.எஸ்சி படிக்க ரூ.7 ஆயிரமும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது தவிர, தனியாக இளங்கலை மாணவர்களுக்கு எதிர்பாராச் செலவுக்காக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரமும், முதுகலை மாணவர்களுக்கு ரூ.28 ஆயிரமும் வழங்கப்படும்.
மூன்று பிரிவினர்
Stream SA என்பது பிளஸ் ஒன் மாணவர்களுக்கானது. அவர்கள் 10-ம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் குறைந்தபட்சம் 80 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் என்றால் 70 சதவீதம் போதும்.
இதேபோல, Stream SX என்பது பிளஸ்-2 மாணவர்களுக்கானது. அவர்களும் மேற்கண்ட மதிப்பெண் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். Stream SB என்பது முதல் ஆண்டு பி.எஸ்சி படிக்கும் மாணவர்களுக்குரியது. பிளஸ்-2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் 60 சதவீத மதிப்பெண்களும் (இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் என்றால் 50 சதவீதம்) பெற்றிருக்க வேண்டும். இதே மதிப்பெண் தகுதி முதல் ஆண்டு பட்டப் படிப்பில் இருக்க வேண்டியது அவசியம்.
தேர்வுக்கான தேதி
மேற்சொன்ன மூன்று பிரிவுகளிலும் தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்வதற்காகத் திறனறித்தேர்வு (Aptitude Test) நடத்தப்படும். இந்தத் தேர்வுக்கெனக் குறிப்பிட்ட பாடத்திட்டம் நிர்ணயம் செய்யப்படவில்லை என்ற போதிலும் பொதுவாக மாணவர்களின் புரியும் திறனையும், ஆராயும் திறனையும் சோதிக்கும் வகையில் கேள்விகள் அமைந்திருக்கும். 10, 11, 12-ம் வகுப்புகள் மற்றும் முதல் ஆண்டு பட்டப் படிப்பு தரத்தில் கேள்விகளை எதிர்பார்க்கலாம்.
2015-ம் ஆண்டுக்கான மாணவர் அறிவியல் உதவித்தொகை திட்டத்துக்கான தேர்வு நவம்பர் 1-ம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இதற்கு ஜூலை 12-ம் தேதி முதல் ஆன்லைனில் (www.kvpy.org.in ) விண்ணப்பிக்கலாம். தேர்வு மற்றும் முழு விவரங்கள் அடங்கிய அறிவிப்பு நாளிதழ்களில் ஜூலை 2-ம் தேதி வெளியாகும்.
இந்த ஆண்டு (2015-2016) 11-ம் வகுப்பு அறிவியல் பிரிவில் சேரும் மாணவர்கள், பிளஸ் 2 செல்பவர்கள் (கணிதம், அறிவியல் பிரிவு) பி.எஸ்சி படிப்பில் சேர இருக்கும் மாணவர்கள் ஆகியோர் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட இணையதளத்தில் மாதிரித் தேர்வையும் (Mock Examn) ஆன்லைனில் எழுதலாம்.
?
Comments
Post a Comment