ஓ காதல் கண்மனி - சினிமா விமர்சனம்
சினிமா விமர்சனம் - தினத்தந்தி
ஒரு காதல் கதையை கலாசார சர்ச்சையுடன் சொல்லியிருக்கிறார், மணிரத்னம்.
துல்கர் சல்மான், ஒரு நிறுவனத்தில் வீடியோ கேம்ஸ் டிசைனராக இருக்கிறார். நித்யா மேனன், கட்டிடக்கலை நிபுணர். இருவரும் ஒரு ரெயில் நிலையத்தில் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறார்கள். இரண்டாவதாக, ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் சந்தித்துக்கொள்கிறார்கள். நட்பு ஏற்படுகிறது. இரண்டு பேருக்குமே திருமண வாழ்க்கையில் உடன்பாடு இல்லை.
திருமணம் செய்து கொள்ளாமலே பிரகாஷ்ராஜ் வீட்டில் சேர்ந்து வசிக்கிறார்கள். காதலையும், காமத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள். துல்கர் சல்மான், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். அண்ணனும், அண்ணியும் இருக்கிறார்கள். பதவி உயர்வில் அமெரிக்கா செல்ல வேண்டும் என்பது துல்கரின் கனவு.
நித்யா மேனன், பணக்கார பெண். அப்பா கிடையாது. அவரிடம் இருந்து விவாகரத்து வாங்கிக்கொண்ட அம்மா, பெரும் தொழில் அதிபர். கட்டிடக்கலையில் உயர் பதவிக்காக பாரீஸ் (பிரான்சு தலைநகர்) செல்ல வேண்டும் என்பது, நித்யா மேனனின் லட்சியம்.
துல்கர், நித்யா இரண்டு பேருக்குமே அவர்களின் லட்சியம் நிறைவேறுவதற்கான வாய்ப்பு வருகிறது. இருவரும் வெளிநாடுகளுக்கு பறந்தார்களா அல்லது சேர்ந்து வாழ்ந்தார்களா? என்பது படத்தின் உச்சக்கட்ட காட்சி.
துல்கர் சல்மான் இளமையும், சுறுசுறுப்பும் மிகுந்த நாயகன். மிக இயல்பாக நடித்து கதாபாத்திரத்துக்கு உயிரூட்டி, மம்முட்டியின் மகன் என்பதை அநேக காட்சிகளில் நிரூபித்து இருக்கிறார். குறும்புப்பார்வையும், கொஞ்சும் சிரிப்புமாக காதல்வசப்பட்ட இளைஞன் ‘ஆதி’யாக கவனம் ஈர்க்கிறார்.
நித்யா மேனன், பேசும் விழிகளை கொண்ட பெரிய கண்ணழகி. கொஞ்சம் சோகம், நிறைய சந்தோஷம், ஆழமான காதல் என அத்தனை உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்துகிறார்.
‘‘அப்பா போய் சேர்ந்துட்டார். அம்மா விவாகரத்து வாங்கிக் கொண்டு கோவையில் இருக்கிறார். ஏழு வயது குழந்தையிடம் அம்மாகிட்ட போறியா, அப்பாகிட்ட போறியா?ன்னு கேட்டபோது, ரெண்டு பேரும் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். அப்ப முடிவு பண்ணினேன்...கல்யாணமே பண்ணிக்கக் கூடாதுன்னு’’ என்று தனது தனிமை வாழ்க்கையை துல்கர் சல்மானிடம் சொல்லும் இடத்தில், ‘தாரா’ என்ற அந்த கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறார்.
பாடல் காட்சியில், துல்கரின் தோளில் தொற்றிக்கொண்டு, இடுப்பில் கால் போட்டு, வளைந்தும் நெளிந்தும் அபாரமாக விளையாடி இருக்கிறார்.
யதார்த்த நடிப்புக்கு இன்னொரு பெயர், பிரகாஷ்ராஜ். அறுபதை கடந்த பெரியவர் கணபதியாக வாழ்ந்திருக்கிறார். அவருடைய மனைவியாக, லீலா சாம்சன்.
லீலா சாம்சன் காணாமல் போகும் பதினைந்து நிமிடங்கள் அடைமழையில் நனைந்த உணர்வை ஏற்படுத்தி விடுகிறார், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். ஏ.ஆர்.ரகுமான் இசையில், கவிஞர் வைரமுத்துவின் வசீகர வரிகள், பாடல் காட்சிகளுடன் ஒன்ற வைக்கின்றன.
‘‘மாட்டிக்கிட்டியா...மாட்டிக்கிட்டேன்,’’ ‘‘தேடுவாங்க...தேடட்டும்...’’ போன்ற ‘மணிரத்னமான’ வசன வரிகள், நிறைய இடங்களில் ரசிக்கவைக்கின்றன. இடைவேளை வரை நேரம் போனதே தெரியவில்லை. திரைக்கதையில், அத்தனை விறுவிறுப்பு. அப்புறம் கொஞ்சம் நெளியவைத்து, இறுதியில், ‘பக்கா’வாக நிமிர்ந்து உட்கார வைக்கிறது.
துல்கர் சல்மான்–நித்யா மேனன் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்வதும், திருமணத்துக்கு முன்பே ‘செக்ஸ்’ வைத்துக்கொள்வதும் கலாசார சர்ச்சையை ஏற்படுத்தும் காட்சிகள். அதை நியாயப்படுத்தாத முடிவு, பெரிய ஆறுதல்.
Comments
Post a Comment