குழந்தைகளை படிக்க விடுங்கள்
குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தில் சில முக்கிய திருத்தங்களைச் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
குழந்தைத் தொழிலாளர்களை ஈடுபடுத்தும் நிறுவனங்கள், நபர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை, அபராதம் மூன்று மடங்கு வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. இன்னொரு முக்கியமான திருத்தம் என்னவென்றால், 14 வயதுக்கும் குறைவான குழந்தைகளை அவரவர் குடும்பத் தொழிலில் ஈடுபடுத்தலாம் என்பதுதான். அதற்கு அந்தத் தொழில் ஆபத்தான தொழிலாகப் பட்டியலிடப்பட்டிருத்தல் கூடாது; பள்ளி நேரம் முடிந்த பிறகும், பள்ளி விடுமுறை நாள்களில் மட்டுமே இந்தக் குழந்தைகளை குடும்பத் தொழிலில் ஈடுபடுத்தலாம் என்று இரண்டு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
குடும்பத் தொழில் என்பது மளிகைக் கடை, பெட்டிக் கடை, பழம் அல்லது பூக்கடையில் பெற்றோருக்குப் பதிலாக சிறிது நேரம் வியாபாரத்தைப் பார்ப்பது; நெசவுத் தொழிலில் பெற்றோருடன் அமர்ந்து ஜரிகை கோத்துவாங்குவது; அப்பாவின் தையல் கடையில் பட்டன் தைத்துத் தருவது, பெற்றோர் சிறிய உணவுக் கடை நடத்தினால், குழந்தைகள் சிறு வேலைகளில் ஈடுபடுவது போன்றவைதான். இத்தகைய உதவிகளில் ஈடுபடும் சிறார்களையும், மாலை நேரத்தில் (பள்ளிச் சீருடையுடன்) முறுக்கு, மாம்பழம் போன்றவற்றை விற்ற மாணவர்களையும் தொழிலாளர் நல அலுவலர்கள் "சிறை'ப் பிடித்து பெற்றோரைத் தண்டிக்க முற்பட்டதால் எழுந்த எதிர்ப்புதான் இந்தச் சட்டத் திருத்தத்துக்குக் காரணம்.
இந்த அனுமதி குழந்தைகளுக்கு எதிரானதாக அமைந்துவிடும் என்று இந்தப் புதிய திருத்தத்துக்குக் குழந்தை நல விரும்பிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இத்தகைய அனுமதியை சட்டம் வழங்கினால், பல ஏழைப் பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவே மாட்டார்கள், மேலும் குழந்தைப் பருவத்துக்கான மகிழ்ச்சிகளை இக்குழந்தைகள் அனுபவிக்க முடியாமல் போய்விடும் என்பது அவர்களது நியாயமான கவலை.
இந்த அச்சத்தைப் போக்கும் விதமாகப் பள்ளி செல்லா நேரங்களில் மட்டுமே இக்குழந்தைகளை குடும்பத் தொழிலில் ஈடுபடுத்தலாம் என்று இந்தச் சட்டத் திருத்தம் வலியுறுத்துகிறது. மேலும், இவ்வாறு பள்ளி செல்லும் நேரத்தில் குழந்தைகளை குடும்பத் தொழிலில் ஈடுபடுத்தினால், பெற்றோருக்கு முதல் முறை எச்சரிக்கையும், இரண்டாவது முறை தண்டனையும் அளிக்க இந்த சட்டத் திருத்தம் வழி வகுத்துள்ளது.
பள்ளி செல்லா நேரத்தில் குழந்தைகளைக் குடும்பத் தொழிலுக்குப் பயன்படுத்தினால் அவர்களைப் பெற்றோர் படிக்க அனுமதிக்காமலும், வீட்டுப் பாடங்களைச் செய்ய விடாமலும் வேலை வாங்குவார்கள் என்ற வாதத்தை முற்றிலுமாக மறுக்க இயலாது. அதே நேரத்தில், இந்தக் குழந்தைகளைக் குடும்பத் தொழிலில் ஈடுபடுத்தாவிட்டால் அவர்கள் படிப்பார்களா அல்லது தொலைக்காட்சி பார்ப்பார்களா போன்ற எதிர்க்கேள்விகளும் எழுகின்றன. தங்கள் குழந்தைகள் நன்கு படிக்க வேண்டும் என்று விரும்பும் பெற்றோரின் விழைவைப் பொருத்தே இது அமையும்.
இந்தத் திருத்தத்தில் 14 வயதுக்குள்பட்ட குழந்தைகள் திரைப்படம், விளம்பரப் படங்களில் நடிக்க, ஒலி-ஒளி ஊடகங்களில் உழைப்பை நல்க அனுமதிக்கிறது. இந்தப் பொழுதுபோக்குத் தொழில்களில் சர்க்கஸ் தொழிலில் மட்டுமே குழந்தைகள் பணியாற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. தாய், தந்தையருக்கு குடும்பத் தொழிலில் உதவும் குழந்தைகளுக்கு ஒளி, ஒலி ஊடகங்களில் உழைப்பை நல்கும் குழந்தைகளைப் போல எந்த ஊதியமும் தனியாகக் கிடையாது. தாய், தந்தையரின் பாசம் மட்டுமே கிடைக்கும். குடும்பத் தொழில் குறித்த அனுபவம், புரிதல் இருக்கும். அப்படியிருக்கும்போது அதற்கு கடிவாளம் போடுவானேன்? அதிக ஊதியம் கிடைக்கும் என்பதால் ஒலி-ஒளி ஊடகங்களில் பணியாற்ற அனுமதிக்கப்படலாம் என்பது சரியாகப்படவில்லை.
பல கடைகளும், சிறு வியாபாரிகளும் சிறுவர்களைப் பணியமர்த்திவிட்டு தங்கள் குழந்தைகள் என்று பொய் சொல்லும் அவலங்களும் நேரிடக் கூடும் என்பதால், அவர்கள் அந்தக் குடும்பத்தின் குழந்தைகள்தான் என்பதற்கான ஆதாரம் மிக அவசியம். இதை அரசு எப்படி உறுதிப்படுத்தப் போகிறது என்பது தெரியவில்லை.
தான் செய்யும் குறைந்த ஊதியத்துக்கான தொழிலையே தனது குழந்தையும் செய்ய வேண்டும் என்று எந்தத் தாய், தந்தையரும் விரும்பமாட்டார்கள். தங்களைப் போல் அல்லாமல், நன்றாகப் படித்து அவர்கள் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதே அனைத்துப் பெற்றோர்களின் விருப்பமாக இருக்கும். ஆனால், வாழ்க்கைச் சூழல் இடம்தராத காரணத்தால்தான், தங்கள் ஓய்வுக்காக குழந்தைகளை சிறிது நேரம் அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
குடும்பத் தொழிலில் குழந்தையை ஈடுபடுத்துவது தவறா, சரியா என்பதே முடிவு பெறாத வாதம்தான். எனினும் குழந்தைகளின் கல்வி உரிமையை உறுதி செய்வது நம் அனைவரின் கடமை...
Comments
Post a Comment