புத்தக தினம்
இன்று ஏப்ரல் 23 உலக புத்தக தினம்
புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை மக்கள் மத்தியில் வளர்க்கும் வகையில் ஏப்ரல் 23-ந்தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது. நூல்கள் படித்து பாதுகாக்கப்பட வேண்டிய காலப்பெட்டகம். இது காகிதங்களில் அச்சடிக்கப்பட்டு தொகுக்கப்பட்ட தொகுப்பு அல்ல. கடந்த கால வரலாற்றை, இன்றைய நிகழ்வுகளை, செய்திகளை எதிர்கால தலைமுறைக்கு கொண்டு சேர்க்க எழுத்தின் வழி பதிவு செய்யப்பட்ட ஆவணமே நூல்கள்.
பாரீஸ் நகரில் 1995-ம் ஆண்டு ஆகஸ்டு 25 முதல் நவம்பர் 16-ந்தேதி வரை நடந்த யுனெஸ்கோவின் 28-வது மாநாட்டில் ‘‘அறிவை பரப்புவதற்கும் உலகமெங்கும் உள்ள பல்வேறு கலாசாரங்களை பற்றிய விழிப்புணர்வு பெறுவதற்கும் புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும் புத்தகம் சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23-ந்தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்’’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலக்கிய மேதை ஷேக்ஸ்பியரின் பிறந்த தினமான ஏப்ரல் 23 அன்று புத்தக தினம் கொண்டாடுவதை பொருத்தமான ஒரு விஷயமாக யுனெஸ்கோ மாநாடு கருதியது. புத்தகம் வெறும் எழுத்துகளையோ, வெற்றுத் தாள்களின் தொகுப்புகளையோ கொண்டது அல்ல. ஒவ்வொரு புத்தகமும் ஒரு படைப்பாளியின் எண்ணக்கனவு, லட்சியங்களை கொண்டிருக்கிறது.
தேனீக்கு தேன் எடுப்பது வேலையல்ல. அது ஒரு பரவசம். நமக்கு புத்தகம் படிப்பது வேலையல்ல. வேலை என்று நினைத்தால் அது சுமை. பரவசம் என்று நினைத்தால் அது சுவை. சுவாசிப்பதும் வாசிப்பதும் தான் வாழ்க்கை. சுவாசிப்பது உயிருக்கு, வாசிப்பது வாழ்க்கைக்கு. அப்படி வாழ்ந்தவர்களே சாதனைகளை படைத்திருக்கின்றனர். எந்த துறையை சேர்ந்தவர்களாயிருந்தாலும் அந்தந்த துறை சார்ந்த நூல்களை படிப்பது முக்கியம். அறிவை விரிவு செய்ய விரும்புகிறவர்கள் பலவகை நூல்களை படிப்பது அவசியம். மாணவர்கள் பாடப்புத்தகங்களை மட்டுமல்ல... ஒவ்வொரு நாளும் பயனுள்ள புத்தகங்களை தேடி படிக்க வேண்டும்.
புத்தகங்களை வாசிப்போம்
வாழ்க்கையை நேசிப்போம்...
Comments
Post a Comment