யார் பொறுப்பு ?
எங்களுக்கு கிரிக்கெட் தெரியாது...
பதக்கம் வென்ற வீராங்கனை பானிபூரி விற்கும் அவல நிலை
புதுடில்லி: தேசிய மற்றும் மாநில அளவிலும், சர்வதேச அளவிலும் பல பதக்கங்களை வென்ற வீராங்கனைகள், வறுமை காரணமாக கூலி தொழிலாளியாகவும், கொத்தடிமையாக பணிபுரிவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவரும், கடந்த டிசம்பர் மாதம் நடந்த தேசிய விளையாட்டு போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை ரிசு மிட்டல் என்பவர், வறுமை காரணமாக வேலைக்காரியாக பணிபுரிந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மிட்டலின் தாயார் இறந்த காரணத்தினாலும், பள்ளிக்கு தொடர்ந்து செல்ல வேண்டும் என்ற காரணத்தினாலும் அவர் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார். தற்போது 10ம் வகுப்பு படித்து வரும் அவர், சகோதரருடன் கடை ஒன்றில் தங்கியுள்ளார். ரிஷூ மிட்டல் மட்டும் அல்லாமல், பல வீராங்கனைகளும் வறுமையால் வாடுவதாகவும் தெரியவந்துள்ளது.
பானி பூரி விற்கும் வெண்கலப்பதக்கம் வென்ற வீராங்கனை:
கடந்த 2011ம் ஆண்டு ஏதேன்சில் நடந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இரண்டு வெண்கலப்பதக்கம் வென்ற வீராங்கனை சீதா சாகு என்ற தடகள வீராங்கனை வறுமையால் பானிப்பூரி விற்று வருகிறார். 15 வயதாகும் இந்த வீராங்கனை, ம.பி., மாநிலம் ரேவா மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் குடும்பத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் பானிபூரி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் பிரிவிலும்,1600 பிரிவிலும் பதக்கம் வென்ற இவர், தன்னுடன் பிறந்த 3 பேரை சேர்த்து குடும்பத்தில் உள்ள 6 பேருக்காகவும் பானி பூரி விற்கும் நிலையில் உள்ளார். போபியா டாங்கி என்ற பகுதியில் வசிக்கும் இவர், பானிபூரிக்கு தேவையானவற்றை தயார் செய்து தருகிறார். இதனை எடுத்துக்கொண்டு அவரது சகோதரர் விற்பனை செய்து வருகிறார். இதன் மூலம் இவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.150 முதல் ரூ.180 வரை மட்டுமே வருமானம் கிடைக்கிறது. ஒரு சில நாளில், குறைவாகவும் கிடைக்கும்.
இது தொடர்பாக சீதா சாகுவின் தாயார் கூறுகையில், கடைசி முறையாக எனது குழந்தைகளுக்கு எப்போது பழம், பால் வாங்கி கொடுத்தேன் என்பது நினைவு இல்லை. எப்போது திருப்தியான சாப்பாடு செய்து கொடுத்தேன் என்பது கூட நினைவில்லை. எனது கணவர் உடல் ரீதியான உழைப்பை செய்ய முடியாததால், நாங்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பானி பூரி விற்பதே எங்களது குடும்பத்திற்கான வருமானத்திற்கான ஒரே வழி. கடந்த சில வருடங்களாக எங்களது வாழ்க்கையை இவ்வாறு தான் நடத்தி கொண்டுள்ளோம் என கூறினார். இவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு உதவி செய்து தரவில்லை.
சீதா சாகு கூறுகையில், குடும்பத்திற்காக சம்பாதிப்பதால், வறுமை எனது லட்சியத்திற்கு தடையாக இருந்ததில்லை. மாநில அரசும் இதுவரை எந்த உதவியும் செய்து தரவில்லை. என் மீதான இரக்கமும், ஆதரவு கிடைப்பதில் உள்ள தடையுமே தன்னை தடுமாற செய்துள்ளது என கூறினார்.
சீதா சாகுவின் பயிற்சியாளர் சாஜித் மசூத் கூறுகையில், மாநில அரசு பல்வேறு உதவிகள் செய்து தருவதாக கூறினாலும், இதுவரை எந்தவித உதவியும் செய்து தரப்படவில்லை என கூறினார்.
சீதா சாகுவிற்கு உதவி செய்து தருவதாக கூறிய மாநில அமைச்சர் கோபால் பார்காவை, சகோதரர் தர்மேந்திரா அணுகியுள்ளார். இருப்பினும், இதுவரை மாநில அரசு தனது உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்து விட்டதாக கூறினார்.
காய்கறி விற்கும் கபடி வீராங்கனை சாந்தி:
பீகார் மாநிலம் கபடி வீராங்கனையான சாந்தி தேவி(40) என்பவர், வறுமையாலும், தனது மூன்று மகன்கள் மற்றும் மகளுக்கு உணவு வழங்குவதற்காகவும், மார்க்கெட்டில் காய்கறி விற்பனை செய்து வருகிறார். கடந்த 1980ம் ஆண்டுகளில், நடந்த 30,31,32வது தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் பீகார் சார்பில் இவர் கலந்து கொண்டார். கவுகாத்தியில் நடந்த தேசிய மகளிர் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார். பீகார் கபடி பெடரேசன் நடத்திய போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார்.
சாந்தி தேவி கூறுகையில், வறுமையால் வாடுவதால் எனது குழந்தைகளின் பள்ளிப்படிப்பும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. எனக்காக இரண்டு மகன்களும் வேலை பார்த்து வருகின்றனர். பீகார் மாநிலத்திற்காக 30 முறை பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். ஆனால் மாநில அரசு எனக்கு எந்த வேலையையும் தரவில்லை என கூறினார். மேலும் அவர், கபடி போட்டியில் எனது குழந்தைகளுக்கு ஆர்வம் வந்துவிடக்கூடாது என்பதற்காக நான் வாங்கிய பதக்கங்களை மறைத்து வைத்துள்ளேன். எனக்கு கிடைத்த இந்த கஷ்டம் எனது குழந்தைகளுக்கு கிடைக்கக்கூடாது என கூறினார்.
Comments
Post a Comment