அகரம் பவுண்டேஷன்
அகரம் ஃபவுண்டேசன் "விதை திட்டம்" மூலம் 2010 - ஆம் ஆண்டிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் 12 - ம் வகுப்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும், சமூக, பொருளாதார நிலைகளில் பின்தங்கிய, மாணவர்களின் பட்டப்படிப்பிற்கான உதவிகளையும், தனிப்பயிற்சிகளையும் அளித்து நல் எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை மாணவர்களுக்கு சிறப்பாக வழங்கி வருகிறது.
2014 -2015 ஆம் கல்வியாண்டில் தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும், சமூக, பொருளாதார நிலைகளில் பின்தங்கிய, மாணவர்களை சிறப்பான எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்ல தங்களது இன்றியமையா பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.
அகரம் விதை திட்டம் பற்றிய விவரங்கள், மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள் ஆகியன தங்களது மேலான பார்வைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
இத்தகவலை உங்கள் அருகாமையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் +2 பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கொண்டு சேர்க்கவும்.
அகரம் 'விதை' திட்டத்தில் பங்கேற்க தேவையான விதிமுறைகள்:
1.2014-2015 கல்வியாண்டில் பிளஸ்-டூ பயிலும் மாணவர்களுக்கே இத்திட்டம் பொருந்தும்.
2.எந்தப் பாடத்தை முதன்மையாக எடுத்திருந்தாலும், நல்ல மதிப்பெண் எடுக்கும் திறன் இருக்கிற, பொருளாதார சிக்கலால் மட்டுமே மேல்படிப்பு பெற முடியாத மாணவர்கள் அகரம் 'விதை' திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
அகரம் 'விதை'திட்டத்தில் பங்கேற்க மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
1.சுய விவரங்கள் (மாணவரின் தெளிவான தொடர்பு முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்)
2.2014-2015 கல்வியாண்டில் பிளஸ்-டூ பயிலும் மாணவர்கள் தங்கள் குடும்பச் சூழலை விளக்கி, (குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களின் விவரங்களுடன்), பெற்றோர் செய்யும் வேலை, மேற்படிப்புக்கு உதவிகோரும் காரணம், படிப்பில் இருக்கிற ஆர்வம் முதலியவற்றை விளக்கி தங்களின் கைப்பட விண்ணப்ப கடிதம் எழுத வேண்டும்.
3. விண்ணப்பிக்கிற மாணவரின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் நகலை விண்ணப்பத்துடன் அவசியம் இணைக்க வேண்டும்.
4.பன்னிரெண்டாம் வகுப்பில் காலாண்டு அரையாண்டு தேர்வில் மாணவரின் ஒவ்வொரு பாடத்தின் மதிப்பெண் நிலவரத்தை வகுப்பாசிரியர் /தலைமையாசிரியரின் கையொப்பம் & முத்திரையுடன் தனித்தாளில் எழுதி இணைக்க வேண்டும்.
5. விண்ணப்பிக்கும் மாணவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2015-ஆம் ஆண்டின் பிளஸ்-டூ பொதுத்தேர்வின் எண்ணை மறக்காமல் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
6. குடும்ப அட்டை – நகல்
7. சாதி சான்றிதழ் – நகல்
8. வருமான சான்றிதழ் – நகல்
9. மாணவரது பாஸ்போர்ட் அளவு உள்ள புகைப்படம் (புகைப்படத்தின் பின்புறம் பெயரை எழுதவும்)
10. பெற்றோர் இழந்த மாணவர் எனில், பெற்றோர் இறப்பு சான்றிதழ் நகல்
11. மாற்று திறனாளி மாணவர் எனில், அதற்குரிய சான்றிதழ் நகல்
12.மாணவர்கள் தங்களது மேல்நிலை கல்வியை தனியார் பள்ளியில் கட்டண சலுகையுடன் படித்திருந்தால், அதற்கான சான்றிதழ் நகல்
13. தெளிவான கையெழுத்தில் மாணவரின் வீட்டு முகவரியும், தொடர்புக்குரிய தொலைபேசி எண்ணும் இடம் பெறுவது அவசியம். விண்ணப்பத்தில் சரியான தகவல்களே இடம்பெற வேண்டும். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அகரம் பவுண்டேசனின் தன்னார்வலர்கள் இருவர் தனித்தனியாக நேரில் வந்து மேற்ப்பார்வை செய்வார்கள். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களில் தவறு இருப்பின், அந்த மாணவர் உடனடியாக நிராகரிக்கபடுவார்.
14. விண்ணப்பதை சரிபார்க்க மாணவரின் வீட்டு முகவரிக்கு வருகிற அகரம் தன்னார்வலருக்கு, தகவல்களைச் சரிபார்க்கத் தேவையான ஒத்துழைப்பை மாணவர் தரப்பிலிருந்து அளிக்கவேண்டும்.
15. 05.03.2015 தேதிக்குள் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்புகளைச் சரியாக இணைத்து, தலைமையாசிரியரின், கையொப்பத்துடன் அனுப்பிவைக்க வேண்டும்.
குறிப்பு:
1) மேற்கூறிய சான்றிதழ்கள் அனைத்தின் நகல் மட்டுமே இணைக்கப்படவேண்டும்.
2) விண்ணப்ப உறையின் மீது "அகரம் விதை திட்டம் 2015" என குறிப்பிடப்படவேண்டும்
3) பிளஸ்-டூ தேர்வு முடிவு வந்தப்பிறகே, உதவிக்குரிய மாணவர்களின் பட்டியல் வெளியிடப்படும். அதுவே இறுதியான பட்டியலாக அமையும், தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
அகரம் விதை திட்டம் 2015
அகரம் ஃபவுண்டேசன்,
29, கிருஷ்ணா தெரு, தியாகராய நகர்,
சென்னை - 600 017.
தொலைபேசி : 044-43506361 / 9841891000.
Comments
Post a Comment